திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் தாட்கோ சார்பில் 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

*இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தாட்கோ சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது, அதில், எஸ்பி பிரபாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், உதவி கலெக்டர் பல்லவிவர்மா, ஆர்டிஓ மந்தாகினி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயதொழில் கடனுதவி, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 387 பேர் மனு அளித்தனர். அதன்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, தரைதளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய உதவிகளை உடனுக்குடன் வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டம், கட்டணமின்றி மனுக்கள் எழுதித்தரும் உதவி மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

அதோடு, கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, துறைவாரியாக ஆய்வு நடத்தினார். மேலும், தாட்கோ மூலம் கடனுதவி, நிவாரணம் உள்பட 14 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், திருவண்ணாமலை சந்தைமேடு இந்திரா நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வைரக்குன்று மலை அடிவார பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

ஏரிக்கரை மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் நீணட காலமாக வசித்து வரும் தங்களின் வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதால், மாற்று இடம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஜவ்வாதுமலையை சுற்றுலா தலமாக மாற்றினால், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் நில உரிமை பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.

இந்நிலையில், மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம்போல கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு சென்ற பை உள்ளிட்ட பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

The post திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் தாட்கோ சார்பில் 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: