வரும் 26ம் தேதி நடக்கிறது துணைவேந்தர்களுடன் ஆளுநர் சந்திப்பு கூட்டம்

சென்னை: அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துரையாடிய நிலையில், ஆளுநரும் துணைவேந்தர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கான கூட்டம் 26ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த விஷயங்களை ஆய்வு செய்யும் ஆலோசனை கூட்டத்தை உயர்கல்வித்துறை நேற்று கூட்டியது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இது ஒருபுறம் இருக்க, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு அம்சமாக, தனியார் பல்கலைக்கழகங்களின் துணை ேவந்தர்களை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்துவதுடன் ஆராய்ச்சி பணிகளையும் விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களையும் அழைத்துப் பேச ஆளுநர் முடிவெடுத்துள்ளார். அதற்கான கூட்டம் வரும் 26ம் தேதி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திலும், தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கும் நிலையில் அரசு சார்ந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post வரும் 26ம் தேதி நடக்கிறது துணைவேந்தர்களுடன் ஆளுநர் சந்திப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: