×

மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு முதல்வரை ஆளுநர் சந்தித்து பேசுவதால் என்ன பயன்? அமைச்சர் ரகுபதி கேள்வி

புதுக்கோட்டை: மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்போது தமிழக முதல்வரை ஆளுநர் சந்தித்து பேசுவதால் என்ன பயன் என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல உச்சநீதிமன்றம் கூறியதற்கு பிறகு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்துள்ளார். இருப்பினும் முதலமைச்சர், வெள்ள நிவாரண பணிகள் முடிந்த பின்னர் ஆளுநரை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லா மசோதாக்களையும் ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டு பிறகு, அவரை முதல்வர் சந்தித்து பேசுவதால் என்ன பலன் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்‌. தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகை இருக்கக்கூடிய ஒரு தெருவில் நடந்த சம்பவத்திற்கு சட்டம் – ஒழுங்கு கெட்டுள்ளது. தேசிய புலனாய்வு விசாரணை தேவை என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. தேச நலன் காக்கப்படுவதில் திமுகவிற்கு மாறுபட்ட கருத்து கிடையாது. உள்ளேயே சதி நடந்ததா, வெளியே சதி நடந்ததா, இதில் யாருக்கு தொடர்புள்ளது என்பதையெல்லாம் எந்த விசாரணை அமைப்புகள் விசாரிக்க போகிறதோ அவை கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நல்ல தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்தால் சரி. புழல் சிறையில் மிகுந்த பாதுகாப்பு இருக்கிறது. அந்த பாதுகாப்பையும் மீறி ஒரு சில சமயங்களில் சிறை கைதிகள் தப்பி செல்கின்ற சம்பவமும் நடந்து விடுகின்றது. ஏதோ ஒரு வழியில் அவர்கள் வெளியேறி விடுகிறார்கள். ஆனால் உடனே அவர்களை நிச்சயம் பிடித்து விடுவோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. புழல் என்பது பாதுகாப்பான ஒன்று. அவர்கள் பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பி சென்றதாக ஒரு தகவல். நிச்சயமாக தப்பி சென்றவரை மிக விரைவில் பிடித்து விடுவோம். தமிழ்நாடு காவல்துறை கெட்டிக்காரத்தனமாக செயல்பட்டு மிக விரைவில் அவரை பிடித்து விடுவார்கள்.

சிறையில் இருக்க கூடிய சிறைவாசிகளின் மன உளைச்சலை போக்க அவர்களது குடும்பத்தார்கள், குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. மன உளைச்சலில் இருந்து அவர்களை மீட்பதற்காக அவர்கள் குடும்பத்தாருடன் அதிக நேரம் பேசுவதற்கும் வீடியோ காலில் மூலம் பேசுவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது. மன உளைச்சலை குறைத்து, அவர்கள் குடும்பத்துடன் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைக்கு தமிழ்நாடு சிறைத்துறை உருவாக்கி தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆளுநர் தமிழிசைக்கு பதிலடி
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘திமுகவிற்கு எப்படி பேச வேண்டும் என்பதை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லித்தர வேண்டியதில்லை. நாங்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. திமுக இளைஞரணி செயலாளருக்கு எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் என்பது நன்றாக தெரியும். நிச்சயமாக துணிச்சலாக கருத்துக்களை அவர் சொல்வதாலே அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள் என்பதற்கு அவருடைய பேச்சு ஒரு எடுத்துக்காட்டு.

இது உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. ஆளுநராக இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜன் மட்டும்தான் அதிகப்படியான பேட்டிகளை கொடுத்து வருகிறார். மற்ற ஆளுநர்கள் இதுபோன்று பேசுவது கிடையாது. தமிழிசையை பொருத்தவரை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராகவே அவர் தற்போது வரை கருதிக் கொண்டு இருக்கிறார் என்றுதான் நினைக்கின்றோம்’ என்றார்.

The post மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு முதல்வரை ஆளுநர் சந்தித்து பேசுவதால் என்ன பயன்? அமைச்சர் ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : chief minister ,Minister ,Raghupathi ,Pudukottai ,Tamil ,Nadu ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து