சென்னை: தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க், தனி செயலாளர், இளநிலை நிர்வாகி, வரவேற்பாளர், சார் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வன பாதுகாவலர், காவலர், இளநிலை ஆய்வாளர் என 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு முடிவை கடந்த 28ம் தேதி வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் பல்வேறு விளக்கங்களை டிஎன்பிஎஸ்சியிடம் கேட்டு தெரிந்து வருகின்றனர். அதற்கு டிஎன்பிஎஸ்சி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்கு பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று தேர்வர்கள் கேட்டுள்ளனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்கு பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பதில் தெரிவித்துள்ளது. மேலும் இணையவழி விண்ணப்பத்தின்போது, தெரிவித்த வகுப்பு சான்றிதழ், தமிழ்வழிக் கல்வி பயின்றோர் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், பிழைகளை சரி செய்து புதிய சான்றிதழை, சான்றிதழ் சரிபார்ப்பின் போது பதிவேற்றம் செய்யலாமா? என்று ேகட்டுள்ளனர்.
அதற்கு டிஎன்பிஎஸ்சி பிழைகள் இருப்பின் பிழைகளை சரி செய்து புதிய சான்றிதழை, சான்றிதழ் சரிபார்ப்பின் போது பதிவேற்றம் செய்யலாம்” என்று விளக்கம் அளித்துள்ளது. அறிவிக்கை தேதிக்கு முன்னால் பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்று தேர்வர்கள் கேட்டுள்ளனர். அதற்கு டிஎன்பிஎஸ்சி “அறிவிக்கை தேதிக்கு முன்னால் பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளது.
The post தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் appeared first on Dinakaran.