2.5 லட்சம் பேருக்கு அரசுப்பணி, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி

பெங்களூரு: கர்நாடக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதில் 2.5 லட்சம் பேருக்கு அரசுப்பணி, பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உள்ளிட்ட ஏராளமான சலுகை, இலவச திட்டங்கள் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுவதையொட்டி பா.ஜ, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டனர்.

அந்த தேர்தல் அறிக்கையில், ‘மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 2000 உதவி தொகை வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல்) ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 3000 மற்றும் தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ. 1,500 மாதந்தோறும் ஊக்க தொகை வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்கள் ஊதியம் ரூ. 10,000ல் இருந்து 15,000மாகவும், உதவி ஊழியர்களின் ஊதியம் ரூ. 7,500ல் இருந்து 10,000ஆக உயர்த்தப்படும். ஆஷா ஊழியர்களின் கவுரவ தொகை ரூ. 5,000ல் இருந்து 8,000 ஆக உயர்த்தப்படும்.

15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும். கடலோர மேம்பாட்டிற்கு ரூ. 2,500 கோடியில் திட்டம் கொண்டு வரப்படும். மகளிர் சுய உதவிக் குழு, நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும். மாநில அரசு துறையில் காலியாக இருக்கும் 2.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படும். இந்திரா கேன்டீன் இல்லாத நகரங்களில் மேலும் கேன்டீன் தொடங்கப்படும். கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தவும் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க புதிய கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

வீடு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். பஜ்ரங் தளம், பிஎப்ஐ போன்ற அமைப்புகள் தடை செய்யப்படும். பாஜ ஆட்சிகொண்டு வந்த மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்கள் ரத்து செய்யப்படும். மாநில அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர். மாற்றம், மேம்பாடு, வளர்ச்சி ஆகிய மூன்று நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கல்யாண-கர்நாடகா, கித்தூர்-கர்நாடக, கடலோரம், மத்திய கர்நாடக, தென் கர்நாடக பகுதிகளில் மேம்பாட்டிற்கு தனி திட்டம் செயல்படுத்தப்படும்’ என்பது உள்பட பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2.5 லட்சம் பேருக்கு அரசுப்பணி, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: