மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு திட்டம், கட்டணமில்லா மற்றும் சலுகை கட்டணத்துடன் பேருந்து பயணத்திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை திட்டம் மூலமாக மாதந்தோறும் ரூ.2000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த 4 ஆண்டுகளில் 2,50,987 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,090 கோடி உதவி தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் கூறியதாவது: இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடி வரை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2 ஆயிரம் அரசால் 6 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ சான்றிதழ் மற்றும் உடல் மற்றும் மனவளர்ச்சி தகுதியின் அடிப்படையில் இந்த உதவிதொகையை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிரதி மாதம் 5 தேதிகளில் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பராமரிப்பு தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்றார்.
இதேபோல், சமூக பாதுகாப்பு திட்டம் என்பது வருவாய்த்துறை கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் பொருட்டு சமூக பாதுகாப்பு திட்டங்கள் கடந்த 1962ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் 60 வயதை கடந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம், கடந்த 1974 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அதன்படி, இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.20 வழங்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு காலக்கட்டங்களில் படிப்படியாக உயர்த்தப்பட்டது. இதில் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் கடந்த 2010ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசின் நிதி பங்களிப்புடன் ஓய்வூதிய திட்டம் செயல்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு ஜனவரி 2023ம் ஆண்டு முதல் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கினார். தற்போதைய நிலவரப்படி, ஓய்வூதிய திட்டங்களின் கீழ் 5,34,976 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
The post நான்காண்டு கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகைக்காக ரூ.2,090 கோடி நிதியுதவி: ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5,34,976 பேர் பலன் appeared first on Dinakaran.
