தாழக்குடியில் ஓட வைத்து விட்டு மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்

*சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

ஆரல்வாய்மொழி :ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், சந்தைவிளை, தாழக்குடி போன்ற பகுதிகளில் இருந்து நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மதிய நேரங்களில் தேர்வு நடைபெற்று வருவதால், பெரும்பாலான மாணவ மாணவிகள் காலை 11 மணிக்கு மேல் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளை எதிர்பார்த்து காத்துநின்று, அதில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி சென்ற 33 டி வி பாஸ்ட் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செண்பகராமன்புதூர் சந்ைதவிளை வழியாக தாழக்குடிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சுக்காக தாழக்குடி பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் நாகர்கோவிலில் உள்ள தங்கள் பள்ளிக்கு செல்வதற்காக கடைத்தெரு அருகே காத்து நின்றனர்.

அந்த வழியாக வந்த பேருந்து, பஸ் நிறுத்தம் அருகே ஒரு பயணியை இறக்கி விடுவதற்காக நின்றது. அங்கு காத்து நின்ற மாணவ மாணவிகள் வேகமாக ஓடி வந்து பஸ்ஸில் ஏற முயன்றனர். ஒரு மாணவி மட்டும் ஏறிய நிலையில் மற்ற மாணவிகள் ஏறுவதற்கு முன்பாக ஓட்டுநர் பஸ்சை வேகமாக எடுத்து சென்று விட்டார்.

இதனால் மாணவிகள் செய்வது அறியாது பரிதவித்து நின்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த பொதுமக்கள், அரசு பஸ் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாழக்குடியில் ஓட வைத்து விட்டு மாணவிகளை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் appeared first on Dinakaran.

Related Stories: