தொடர்ந்து தங்கம் விலை சரிவு 9 நாளில் சவரனுக்கு ரூ.3,920 குறைந்தது

சென்னை: கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரி கட்டணத்தை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. சுங்கவரி குறைப்பின் தாக்கத்தால் பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்றது. தொடர்ந்து அதிரடியாக சரிவை சந்தித்து வருகிறது.

அதாவது, 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 18ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,920 அளவுக்கு குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஆடியில் பெரும்பாலும் திருமணங்கள் நடப்பது இல்லை. இந்த நேரம் தங்கம் விலை குறைந்துள்ளது. இருந்த போதிலும் தங்கம் விலை குறைவை பயன்படுத்தி பெரும்பாலானவர்கள் நகைகளை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கடந்த 23ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post தொடர்ந்து தங்கம் விலை சரிவு 9 நாளில் சவரனுக்கு ரூ.3,920 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: