அருள் ‘உடை’மை

இறைவனின் திருவடிவம் அருளாகும். அவனுடைய திருவுருவில் அணிந்திருக்கின்ற ஆடையும், புனைந்துள்ள மாலையும், கைகளில் ஏந்தியிருக்கின்ற மான், மழு, மூவிலைச் சூலமும் அருளின் வடிவேயாகும். ‘‘உரு அருள்… அரன்தன் கரசரணாதி சாங்கம் தரும் அருள்; உபாங்கம் எல்லாம்தான் அருள்’’ என்று சித்தாந்த சாத்திரங்கள் இறைவனின் அருள் திருமேனியை வர்ணிக்கின்றன.

‘‘காஷாய ஸம்வீத காத்ரம்
காமரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்
காருண்ய ஸம் பூர்ண நேத்ரம்
சக்திஹஸ்தம் பவித்ரம் பஜே சம்புபுத்ரம்’’
‘‘காவி உடை தரித்த திருமேனியும், ஆசை முதலான நோய்களை அழிக்கும் பிட்சைப் பாத்திரமும், அருள் நிறைந்த கண்களும், வேல் ஏந்திய கையும் உடைய தூய்மையே வடிவானவரும் சிவபுத்ரருமான சுவாமிநாத சுவாமியை வணங்குவோம்’’ என்பது சுவாமிநாத அஷ்டகம்.

“காஷாய வஸ்த்ரம் கரதண்ட தாரிணம்
கமண்டலும் பத்ம கரேண சங்கம்
சக்ரம் கதா பூஷித பூஷணாட்யம்
ஸ்ரீபாதராஜம் சரணம் ப்ரபத்யே’’

‘‘காவி ஆடை தரித்தவரும், கையில் தண்டம் ஏந்தியவரும், கமண்டலம், தாமரை மலர், சங்கு, சக்ரம், கதை ஆகியவைகளைக் கரங்களில் ஏந்தியவருமான ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சுவாமியை சரணடைவோம்’’ என்பது ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் தியான ஸ்லோகம். இவ்விரண்டு ஸ்லோகங்களிலும், காஷாய ஸம்வீத காத்ரம் (காவி உடை திருமேனி), காஷாய வஸ்த்ரம் (காவி ஆடை தரித்தவர்) என்று அவர்களுடைய ஆடைகளும் அருள் மயமாய் வர்ணிக்கப்படுகின்றன.

கும்பகோணத்தில், ஸ்ரீ ராகவேந்திரர் தங்கியிருக்கும்பொழுது அவரைத் தரிசித்து ஆசி பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவ்வாறு தரிசனம் செய்ய வந்தவர்களுள் மூன்று பேருக்கு மட்டும் ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதன்படி, அவர்கள் மூவரும் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்வதாகவும், அதை ஸ்ரீ ராகவேந்திரர் கண்டுபிடிக்கின்றாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

எனவே, மூவரும் ஆளுக்கொன்றாக மூன்று இனிப்புகளை நினைத்துக்கொண்டு காவிரியில் நீராடச் சென்றனர். அப்பொழுது ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்தைத் (ஆடையை) துவைப்பதற்கு ஸ்ரீராகவேந்திரரின் சீடரும் காவிரிக் கரைக்கு வந்தார். அந்த மூன்று பேர்களைக் கண்டவுடன் ‘சீக்கிரம் குளித்துவிட்டு ஸ்ரீமடம் வாருங்கள். ஸ்ரீ மூலராமர் பூஜையைக் காணுங்கள், பூஜை முடிந்ததும் நீங்கள் நினைத்த இனிப்புகளைச் சாப்பிடலாம்’ என்று சொன்னார்.

‘நாம் நினைத்ததை இவர் எப்படிச் சொல்கிறார்?’ என்று மூவரும் குழப்பமடைந்தனர். அதற்குள் அந்த சிஷ்யர், ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்தை ஒரு கல்லில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார். அவரைப் பார்த்து, ‘எங்கள் மனத்தில் உள்ளதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?’’ என்று கேட்டனர். ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்று சொன்னார். கல்லின் மீது வைத்திருந்த வஸ்திரத்தைத் துவைத்து எடுத்துக் கொண்டு போகும்பொழுது மீண்டும் அவர்களிடம், `ஸ்ரீ மடத்திற்கு வாருங்கள். நீங்கள் நினைத்தது கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டுப் போனார். மூவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்த்ரம் சிஷ்யரின் கையில் இருந்த போதுதான் அவர் இவ்வாறு பேசினார் என்றும், அது கையில் இல்லாத போது அவருக்கு எதுவும் தெரியவில்லை என்றும் முடிவு செய்தார்கள். அதனால், `குரு ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்திற்கே இவ்வளவு மகிமை என்றால், குருவின் மகிமையை என்னவென்பது’ என்று பேசிக் கொண்டே ஸ்ரீ மடம் சென்றனர். அங்கு ஸ்ரீ மூலராமரின் பூஜையைக் கண்டு மகிழ்ந்தனர்.

மூலராமர் பூஜை முடிந்தபின், சாப்பிடும் பொழுது, ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களிடம் வந்து ‘நீங்கள் நினைத்தது எல்லாம் கிடைத்ததா?’ என்று கருணையோடு விசாரித்தார். மூவரும் கண்ணீர் மல்கி குருவின் திருவடிகளை வணங்கி நின்றனர். அப்போது அவர்களிடம், ‘நான் பிருந்தாவன பிரவேசம் ஆன பின்பு, எனது பிருந்தாவனத்தைப் பூஜிக்கும் பொறுப்பை உங்கள் மூவரின் பரம்பரைக்கே கொடுக்கிறேன்.

நீங்கள் விரும்பியபடி அனுதினமும் நைவேத்தியங்கள் செய்ய வேண்டும்’ என்று அருள்பாலித்தார். இப்பொழுது அவர்களின் பரம்பரையினர் விரும்பியபடியே நைவேத்தியங்களைப் படைத்து, பூஜையையும் குறைவில்லாமல் செய்துவருகின்றனர். இதன்மூலமாக, குருவின் வஸ்த்ரம் நாம் நினைத்ததை மட்டுமல்ல, அதற்கும் மேலான அருளையும் கொடுக்கும் என்பதை அறியலாம். ஸ்ரீ ராகவேந்திரரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜரும், தன்னுடைய வஸ்திரத்தால் விஜயநகரத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்த கிருஷ்ண தேவராயருக்கு வந்த குஹூதோஷத்தை நீக்கினார் என்று அவருடைய வரலாற்றுக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.

பொதுவாக சில பண்டிகைகள் / விழாக்கள் சில நட்சத்திரங்களிலும், சில திதிகளிலும் தொடர்பு பெற்றுவந்தால், குஹூதோஷம் உண்டாகுமென்று ஆகமங்களும், ஸம்ஹிதைகளும் கூறுகின்றன. ஆனால் இங்கே குறிப்பிடப் படும் குஹூதோஷம் என்பது தொடர்ந்து அரச பதவிகளில் இருப்பவர்களைத் தாக்கும் ஒரு தோஷமாகும். அது குஹூயோகம் என்றும் கூறப்படும். அந்த தோஷத்தை நீக்குவதற்காக ஒருநாள் மட்டும் விஜய நகர ராஜசிம்மாசனத்தில் ஸ்ரீ வியாசராஜர் ராஜாவாக அமர்ந்தார்.

அப்போது, குஹூதோஷம் ஒரு சர்ப்ப வடிவில் வந்தவுடன், ஸ்ரீ வியாசராஜர் தன் மீதிருந்த வஸ்திரத்தை எடுத்து வீச, அங்கேயே அந்த சர்ப்பம் தீப்பிடித்து கருகியது. இவ்வாறு தன்னுடைய வஸ்திர மகிமையால் கிருஷ்ண தேவராயரைக் காப்பாற்றி விஜயநகரத்திற்கு ஆசி வழங்கினார் ஸ்ரீ வியாசராஜர். யோவானும் இயேசுவும் முற்பிறவிகளில் எலியா (Elijah) எலிசா (Elisha) ஆகிய இருவருமாய் இருந்தனர் என்று விவிலியத்தின் பல பகுதிகள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன.

எலிசா, யூதமதம், கிறிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாம் மதங்களில் தீர்க்க தரிசியாக மதிக்கப்படுகிறார். எலியா என்பதற்கு, ‘யெகோவா எனது கடவுள்’ (yahweh is my god) என்றும், எலிசா என்பதற்கு, ‘இறைவனே எனது கதி’ (God is my Salvation) என்றும் பைபிளின் ஹீப்ரு மொழி கூறுகிறது. பின்னாளில் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழி பெயர்ப்பாளர்கள் இலியாஸ் (Elias), எலிஸியஸ் (Eliseus) என்றும் குறிப்பிட்டனர். எலிசா, எலியாவை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்று அவருக்குப் பணிபுரிந்தார்.

ஒருநாள் எலியா, ‘என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக் கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?’ என்று கேட்டார். அதற்கு எலிசா, ‘உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினார். அப்பொழுது எலியா, ‘கஷ்டமானதைத்தான் கேட்டிருக்கிறாய். உன்னை விட்டு தேவனால் நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் அது உனக்குக் கிடைக்கும்’ என்று உறுதியளித்தார். அதன்படி, எலியாவை எடுத்துக் கொள்ளும் போது, அக்கினி ரதமும் நெருப்புக் குதிரைகளும் தோன்றின.

அப்பொழுது வீசிய சுழற்காற்றால் எலியா அக்னிரதத்தில் வானுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். எலிசா, ‘என் தந்தையே, என் தந்தையே’ என்று சத்தமிட்டார். அந்த நேரத்தில் எலியாவின் மேலாடை தரையில் விழுந்தது. எலிசா அதை எடுத்து வைத்துக்கொண்டார். அந்த மேலாடையே எலிசாவிற்கு குருவின் பிரசாதமாக அமைந்தது. மேலும் அது ஒரு வழிபாட்டு உடையாக தீர்க்க தரிசன வலிமை மிக்கதாக இருந்தது. அதன்பிறகு எலிசா இரண்டு மடங்கு அற்புதங்களைச் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறார். எலிசா தீர்க்கதரிசி மகன்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று விவிலியம் கூறுகிறது. இஸ்லாத்தில் எலிசா, அல்-யாசா என்றும், எலியா, இலியாஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

யோவான் – இயேசு (எலியா – எலிசா) இவர்களிடையே நிலவிய காலவரையற்ற குரு சிஷ்ய பந்தம் பாபாஜி – லாஹிரி மகாசயரிடமும் இருந்தது என்று பரமஹம்ச யோகானந்தர் தன்னுடைய ‘ஒரு யோகியின் சுயசரித’த்தில் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஆரம்பத்தில் பாபாவிடம் நீண்ட கைகளையுடைய தொளதொளப்பான ஒரே ஒரு கப்னி (kafni) மட்டுமே இருந்தது. அது மிகவும் பழையதாகவும் பல இடங்களில் கிழிந்தும் இருந்தது. அந்தக் கிழிசல்களை பகல் வேளைகளில் அவரே தைத்து மீண்டும் உடுத்திக் கொள்வார்.

எப்போதாவது ஒரு மஞ்சள் வேட்டியைக் கட்டிக்கொண்டு கப்னியை தண்ணீரில் துவைத்து, அதனைக் காயவைப்பதற்கு துணிக்கு (எரியும் நெருப்பு) மேல் பிடித்துக்கொண்டு உலர வைப்பார். அவரிடம் உரிமையோடு நடந்து கொள்ளும் தாத்யா தான் ஒரு தடவை கிழிந்த கப்னியை மீண்டும் கிழித்து விட்டார். பாபா புதிய கப்னியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தார். பாபா ஒரு கப்னியை உடுத்திக் கொண்டால் மூன்று, நான்கு மாதங்களுக்கு கழற்ற மாட்டார். அழுக்கேறி அது கறுப்பான பின்பு தான் அதனை புனித அக்னிக்கு ஆஹூதியாகக் கொடுப்பார்.

ஒரு பக்தரின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டு மென்றால் அந்த அதிர்ஷ்ட பக்தருக்கு தன் ஆடையை (கப்னியை) பாபா பிரசாதமாக அளிப்பார். பாபாவின் வஸ்திரங்கள் அதீதமான ஆற்றல் உடையவை. ஒருமுறை மஹல்சாபதி பாபாவிடம் வஸ்திரம் வாங்கிய பிறகு தன் வாழ்நாள் முழுவதும் துறவி போலவும், அதே நேரத்தில் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு ஆன்மிக சாதனையில் முன்னேற்றம் அடைந்தார்.

பாபா முக்தாராமுக்கு தன்னுடைய வஸ்திரத்தைக் கொடுத்தபோது, அது அழுக்காக இருந்ததால் அதை நன்றாகத் துவைத்து, அதை வாதாவில் (தங்கும் இடம்) ஓர் இடத்தில் காய வைப்பதற்கு தொங்க விட்டுவிட்டு, பாபாவைப் பார்க்கப் போய் விட்டார். அப்போது வாதாவில் இருந்த வாமன்ராவிற்கு, ‘பார்த்தாயா, முக்தாராம் என்னை இங்கே கொண்டு வந்து தலை கீழாக தொங்க விட்டுப் போய் விட்டான்’ என்று வஸ்திரத்திலிருந்து அசரீரி கேட்டது.

உடனே, அந்த கப்னியை எடுத்து வாமன்ராவ் உடுத்திக்கொண்டு பாபாவைப் பார்க்க துவாரகமாயி சென்றார். பாபா அதைக் கழற்றுமாறு முதலில் வாமன்ராவைத் திட்டினார். ஆனால், வாமன்ராவ் சந்நியாசம் ஏற்க வேண்டும் என்று உறுதியோடு இருந்ததால் அதனைக் கழற்ற மறுத்தார். பின் பாபா கோபம் தணிந்து விட்டுவிட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் வாமன்ராவ் ஆன்மிக வாழ்வில் மகான் என்ற மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.

28 ஏப்ரல் 1906ல் கேசவ் பகவந்த் கவான்கர் தன்னுடைய 12 வயதில் பாபாவை தரிசனம் செய்த போது, பாபா தன்னுடைய கப்னியை பிரசாதமாகக் கொடுத்தார். எப்பொழுதும் பாபாவுடன் இருக்கும் ஷாமா, ‘அந்தக் கப்னி சிறந்த பிரசாதம். நீ சிறுவயது பையனாக இருப்பதால் நான் அதை வைத்திருந்து பின்னர் உனக்குக் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். பின் கேசவ் படித்து டாக்டரான பின்பு சாமாவிடம் வந்து அந்த கப்னியை பெற்றுக் கொண்டார். இன்றும் அந்த கப்னி அவருடைய பரம்பரை பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ‘Shiladi’, ‘Shirdiche Sai baba’, ‘Sai baba Hach Chamatkar’ என்னும் மூன்று புத்தகங்களை எழுதியவர்தான் இந்த கேசவ் கவான்கர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டே பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்மசுவாமிஜி, தான் எழுதிய ஸ்ரீ சாயி சஹஸ்ரநாமத்தில் `குப்நீவீத கலேவராய நம:’ அதாவது ‘கப்னி அணிந்த திருமேனி உடையவர்’ என்று போற்றுகிறார். குருவிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் பிரசாதங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றைக் காட்டிலும், அவருடைய வஸ்திரமே (ஆடை / உடை) மிக உயர்ந்த குரு பிரசாதமாக, நம்மை தெய்வீக வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அருள் `உடை’மையாக ஆன்மிகத்தில் குறிக்கப் பெறுகிறது. சாயி சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post அருள் ‘உடை’மை appeared first on Dinakaran.

Related Stories: