ஆனால், ராஜகோபாலன் இப்படி போட்டுக்கொண்டிருக்கிறாரே… அப்போது என்ன அர்த்தம் என்று கேட்டால், இங்குதான் நாம் ஒரு பெரிய சூட்சுமத்தை பார்க்கப்போகிறோம். சிவசக்தி ஐக்கிய சொரூபம் என்று நாம் சொல்லக்கூடியது என்னவெனில், சிவம், சக்தி ஆகிய இரண்டும் பரமாத்மாவினுடைய இரண்டு வெளிப்பாடுகள். ஒரு வெளிப்பாடு சிவமாக இருக்கிறது. எந்தவிதமான செயலுக்கும் உட்படாமல் செயலற்ற நிலையிலிருக்கிறது. ஞானம் என்கிற ஒரேயொரு விஷயம்தான் அங்கு ஞானத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அது சிவ சொரூபம். அந்த ஞானம் நமக்கெல்லாம் சித்திக்க வேண்டுமென்பதற்காக அந்த ஞான சொரூபத்தில் ஒரு கருணை, ஒரு அருள் பிறக்கும்போது, ஒரு அன்பு பிறக்கும்போது தாயினுடைய ஸ்தானம் வரும்போது அங்கு அம்பாள் வருகிறாள். ஒரே பரமாத்மா இரண்டாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. பூரணமான ஞானமாக வெளிப்படுத்தும்போது சிவமாக இருக்கிறது. அந்த ஞானத்தோடு காருண்யம் சேரும்போது சக்தியாகிறது. இப்போது இந்த ஞானமும் காருண்யமும் சேருவதுதான் சிவசக்தி ஐக்கிய சொரூபம். இந்த சிவசக்தி ஐக்கிய சொரூபம் எது என்று கேட்டால், அதுதான் விஷ்ணு. அதுதான் நாராயணன். நாராயணன் என்பது சிவசக்தி ஐக்கிய சொரூபம்.
நாம் தத்துவார்த்தமாக ஆழமாக பார்க்கும்போது அந்த விஷயம் நமக்குப் புரிய வரும். இதை நாம் வெளிப்படையாகப் பார்த்தாலே அம்பாளைச் சொல்லும்போது, தந்த்ர சாஸ்திரங்களிலெல்லாம் பிரபலமான ஒரு வாக்கியம் இருக்கிறது. ‘‘கதா சித் லலிதேஸானீ பும்ரூபா கிருஷ்ண விக்ரஹா…’’ என்று வருகிறது. சில நேரங்களில் லலிதாவானவள் தன்னை ஆண் உருவத்தில் கிருஷ்ணனாக வெளிப் படுத்திக்கொள்வாள். தந்த்ர சாஸ்திரங்கள் ஏன் இப்படி சொல்கின்றன என்றால், சிவ சொரூபமான மந்திரங்கள் இருக்கிறது. சக்தி சொரூபமான மந்திரங்கள் இருக்கிறது. சிவ சொரூபமான பீஜாட்சரங்களையும் சக்தி சொரூபமான பீஜாட்சரங்களையும் இணைக்கும்போது, அங்கு சில நேரங்களில் விஷ்ணுவுக்குரிய பீஜாட்சரம் கிடைக்கும். இது மந்திர சாஸ்திரங்களில் சொல்லக்கூடிய நுட்பமான ஒரு விஷயம். அதேபோல சிவனை நாம் புருஷ ரூபத்தில் ஆண் ரூபத்தில் சொல்கிறோம். அம்பாளை பெண் ரூபத்தில் ஸ்ரீ ரூபத்தில் சொல்கிறோம். இப்போது ஸ்ரீ ரூபத்தில் இருக்கக்கூடிய அம்பாள் சுவாமியினுடைய சிவபெருமானுடைய ஆண் ரூபத்தை ஏற்றுக்கொள்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.
அம்பாள் அப்படி தன்னை புருஷ ரூபத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும் போது அது நாராயணனாக இருக்கிறது. நாராயணன் தன்னை ஸ்ரீ ரூபத்தில் வெளிப்படுத்திக்கொண்டால் அது அம்பாள். இதற்கு புராணத்திலேயே ஆதாரம் இருக்கிறது.
பெருமாள் பாற்கடல் கடையும்போது மோகினி அவதாரம் எடுக்கிறார். அந்த மோகினி என்கிற ரூபம் எதுவெனில், சாட்சாத் லலிதாம்பிகையின் ரூபம். பொதுவாக மோகினி என்றால் பெருமாள் ஏதோ வேஷம் போட்டுக்கொண்டு வந்தார் என்று நினைக்கிறோம். ஆனால், வேஷம் கிடையாது. பெருமாள் தன்னுடைய லலிதா ரூபத்தில் வந்ததால் அது மோகினியாக இருக்கிறது. இங்கு சிவம், சக்தி, நாராயணன் இந்த மூன்றும், பரமாத்மாவினுடைய மூன்று விதமான வெளிப்பாடுகள். இங்கு இது வேறு, அது வேறு என்கிற பேதம் பார்க்க முடியாது. நாம ரூபங்களில் பேதம் சொல்லலாமே தவிர, ஆழமாக பார்க்கும்போது ஞானத்தை கொடுப்பதற்காக சிவரூபம். காருண்யத்தை காண்பிப்பதற்காக அம்பாள் ரூபம். இந்த ஞானத்தையும் காருண்யத்தையும் சேர்த்து நம்மை மோட்சத்தை நோக்கி திருப்புவது யாரெனில் அது நாராயண ரூபம். நீங்கள் மோட்சமடைய வேண்டுமெனில் நாராயணனை உபாசிக்க வேண்டுமென்று நம்முடைய சாஸ்திரங்களே சொல்கின்றன. ‘‘நாராயணனே நமக்கே பறை தருவான்.’’ஏனெனில், இந்த ஞானமும் காருண் யமும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்கிறது என்றால் அது பெருமாளிடம் மட்டுமே இருக்கிறது. விஷ்ணு என்பதே குரு ஸ்வரூபம்.இங்கு, பெருமாள் ராஜகோபாலனாக இருக்கிறார். கீழே ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஒரு காதில் குண்டலமும், ஒரு காதில் தோடும் போட்டிருக்கிறார். அப்போது பெருமாள் இந்த இடத்தில் எதைக் காண்பித்துக் கொடுக்கிறார் எனில், வெளிப்படையாகவே சிவசக்தி ஐக்கிய சொரூபத்தைக் காண்பித்துக் கொடுக்கிறார்.
வித்யா தத்துவமே சிவசக்தி சொரூபமாக இருப்பதனால் இங்கு சுவாமி ராஜகோபாலனாக இருந்தால்கூட, அவர் சிவசக்தி சொரூபமாகத் தன்னை வெளிப்படுத்துவதால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக இருக்கிறார். உபநிஷத பிரதானமான முப்பத்திரண்டு வித்யைகளைக் காண்பித்துக் கொடுத்து, இந்த வித்யைகளில் இருக்கும் விஷயம் நானே என்று காட்டி, இவற்றைக் கடந்து அதிசூட்சுமமாக முப்பத்து மூன்றாவது வித்யையாக இருப்பதும் தானே என்று காட்டுவதாலும் ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் என்று பார்த்தோம். எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமுண்டு, மீனாட்சி கல்யாணத்தில், சுந்தரேஸ்வரர் மீனாட்சி கல்யாணத்தை சாட்சாத் அந்த நாராயணனே முன்னின்று செய்து வைக்கும் அந்த திருமணக் கோலத்தை நாம் எல்லோரும் அறிவோம். ஏன், இந்த திருக்கோலத்தைத்தான் எல்லா திருமண மண்டபங்களிலும், பத்திரிகைகளிலும் நாம் சர்வ சகஜமாக பார்க்கலாம். இருப்பதிலேயே the highest form of vedhantha என்பதே இந்த திருக்கோலம்தான். சைவ, வைணவ பேதத்தை பார்க்காமல் அதற்குள் ஒருங்கிணைந்து இருக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தத்துவத்தையே இந்த கட்டுரைகளில் நாம் காண்கிறோம். அதனால், அந்தப் பிரபஞ்ச பேரியக்க சக்தியை அதாவது எல்லா சக்திகளையும் தன்னுள்ளே கொண்டு இலகுகிறது என்று சொல்லவே இந்த கட்டுரை. ராஜமன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலனை குறித்து இன்னும் பல சூட்சுமமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.
(தொடரும்)
ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்
The post தத்துவக் கருவூலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன் appeared first on Dinakaran.