அப்பனே… அப்பனே… பிள்ளையார் அப்பனே..!

காணாபத்யம்

பொதுவாக இந்து சமயத்தின் தெய்வ வழிபாடுகளை ஆறு விதமாகப் பிரித்து அறு சமய நிர்ணயம் (ஷண்மதம்) செய்திருக்கின்றார்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம், திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்ட வைணவம், முருகனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட கௌமாரம், சக்தியை முதற்கடவுளாகக் கொண்ட சாக்தம், விநாயகரை முழு முதற்கடவுளாகக் கொண்ட காணாபத்யம், சூரியனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சௌரம் என்று இந்த ஆறு பிரிவுகளைச் சொல்லுவார்கள். இதில் காணாபத்யம் என்கின்ற சமயம் முழுக்க முழுக்க விநாயகரையும் அவருடைய பிரதாபங்களையும் பேசி, அவரை ஏக தெய்வமாக வழிபடுகின்ற ஒரு மரபு. விநாயகரின் பெருமைகளை (அவரே முதல் கடவுள் என்ற கொள்கையை) விநாயக புராணம், முத்கலப்புராணம், ஹேரம்ப உபநிஷதம், கணபதி உபநிஷதம் முதலான நூல்கள் வலியுறுத்தி கூறுகின்றன

நான்கு யுகங்களிலும் பிள்ளையார்

‘கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

1.கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

2.திரேதாயுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப் பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

3.துவாபரயுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

4.கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல் களைப் போக்கியும் வருகிறார்.

விநாயகர் திருவடி, வயிறு, கரங்கள்

1. திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

2. பெருவயிறு
ஆகாசமானது எல்லாப் பொருள்களுக்கும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

3. ஐந்துகரங்கள்
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

ஏன் குட்டிக் கொள்கிறோம்?

சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் என்று ஐந்து வார்த்தைகள் சொல்லி ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கள் பெறலாம். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என்பார்கள். இவற்றிற்கிடையே சுவாச நடப்பு நடக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சிரசில் குட்டிக் கொள்வதால் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்பு வழியாக நம் சுவாசத்தோடு பாயும். அது நம் மூளையின் நரம்புகளைத் தூண்டி மிகத் தெளிவாகச் சிந்திக்க வைக்கும். நினைவுத் திறனை வளர்க்கும். ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கியக் குறைவுகளை சீராக்கும். மொத்தத்தில் நல்வாழ்வு தரும்.

எளிமையான வழிபாடு

பிள்ளையார் இருப்பிடமோ, பூஜையோ, நிவேதனமோ எளிமையானது. உருவம் கூட வேண்டியதில்லை. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார். சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம். எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். காட்டில் கிடைக்கக் கூடிய எருக்கம்பூவை தலையில் சூடி கொள்வார். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்யலாம்.

The post அப்பனே… அப்பனே… பிள்ளையார் அப்பனே..! appeared first on Dinakaran.

Related Stories: