×

கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலி காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்,
கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டம் -ஒழுங்கு தொடர்பான முக்கிய பிரச்னைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்னை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திட வேண்டும்.

காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில். காவல்துறையினர் சட்டம் -ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், காவல் துறை இயக்குநர் (நிர்வாகம்) வெங்கட்ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், தெற்கு மண்டல காவல் துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

The post கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Secretariat ,Chief Secretary ,Director General of Police ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு