ஜி20 மாநாட்டில் என்ன செய்ய வேண்டும்? ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு முன்பாக, ஜி20 மாநாட்டு கூட்டங்களில் ஒன்றிய அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பிரதமர் மோடி நேரடியாக அறிவுரைகளை வழங்கினார்.

அதிகாரப்பூர்வமற்ற இந்த நிகழ்வு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இதில், ஜி20 உச்சி மாநாடு இந்தியாவிற்கும், உலகளவில் அதன் நற்பெயருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வர உள்ள நிலையில், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா நெறிமுறைகள் மற்றும் அதுதொடர்பான விஷயங்களை அமைச்சர்களுக்கு விரிவாக விளக்கினார்.

உலக நாடுகளின் தலைவர்களுக்கு எந்த ஒரு அசவுகரியமும் ஏற்படாமல், ஏற்பாடுகள் அனைத்தும் மிக கச்சிதமாக இருப்பதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்திற்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு, ஷட்டில் சர்வீஸ் எனப்படும் பொது வாகனத்தில் ஏறி மாநாடு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஜி20 இந்தியா மொபைல் ஆப்பை அனைத்து அமைச்சர்களும் செல்போனில் பதிவிறக்கி பயன்படுத்த வேண்டுமன பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அந்த ஆப்பில் உள்ள மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்தி திறம்பட உரையாடுமாறும் கூறி உள்ளார். ஜி20 இந்தியா மொபைல் ஆப்பில் இந்தி, பெங்காலி உள்ளிட்ட இந்திய மொழிகளும், சீனா, ரஷ்யா போன்ற பல உலக மொழிகளும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய வசதி இடம் பெற்றுள்ளது.

அமைச்சரவை முடிவு
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1164.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நாட்டில் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பகத்தை அமைக்க மொத்த மூலதனச் செலவில் 40 சதவீதம் வரையிலான பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ₹3,760 கோடி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஜி20 மாநாட்டில் என்ன செய்ய வேண்டும்? ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: