மாஜி முதல்வரின் பேத்தியான ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காங்கிரஸ் சார்பில் போட்டி: கர்நாடகா பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

பெங்களூரு: மாஜி முதல்வரின் பேத்தியான ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி அஞ்சலி, கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவ்விசயத்தில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அஞ்சலி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கானாபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் விட்டல் ஹல்கேகரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்தர கன்னட மக்களவை தொகுதியில் அஞ்சலி போட்டியிடுகிறார். இவ்விசயத்தில் பாஜக மாநில தேர்தல் பிரிவு பொறுப்பாளரான எம்எல்சி நாராயணசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கரை மாநில அரசுப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரது மனைவி அஞ்சலி உத்தர கன்னட மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதால், தனது அதிகாரத்தை ஹேமந்த் நிம்பல்கர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே அவரை வேறு மாநிலத்திற்கு பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஞ்சலி, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், உள்துறை அமைச்சருமான சங்கர்ராவ் சவானின் பேத்தியும், கர்நாடகாவை சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் ஐவிஎஃப் நிபுணரும் ஆவார். மும்பையில் உயர்கல்வியை முடித்த அஞ்சலி, கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கரை மணந்தார். முன்னதாக 2017ல் கானாபூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாஜி முதல்வரின் பேத்தியான ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காங்கிரஸ் சார்பில் போட்டி: கர்நாடகா பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: