வெளிநாட்டு மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ள புராதன சின்னங்களை மீட்க நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் வைக்கப்பட்டிருக்கும் நம் நாட்டுக்கு சொந்தமான புராதன பொருட்கள், சிலைகளை மீட்பதற்காக கூட்டு மீட்பு குழுவை அமைக்க கோரிய வழக்கில் சிலைகளை மீட்பது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகநாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் புராதான சின்னங்கள், பழங்கால கோயில் சிலைகள், அரிய பூஜை பொருட்கள், சிவன், முருகன், விநாயகர், மகாவிஷ்ணு, புத்தர், நந்தி, நடராஜர், கிருஷ்ணர் வெளிநாட்டினரால் அபகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் நமது நாட்டின் பாரம்பரிய பொருட்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு சொந்தமான சோழர்கள், பல்லவர்கள் காலத்து சிவா, விஷ்ணு, புத்தர் சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க் ஏசியன் ஆர்ட் மியூசியத்திலும், சிகாகோ ஆர்ட் மையத்திலும் உள்ளன. ராஜராஜசோழன் காலத்தைய ஆனைமங்கலம் கிராமத்திலிருந்த தாமிர தகடுகள் நெதர்லாந்தில் உள்ள லேடன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சொத்துக்களான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இந்த புராதன சின்னங்களை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.

நமது புராதன சிலைகள் அந்தந்த நாடுகளில் ஏலத்திற்கு விடப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு சொந்தமான புராதன சின்னங்கள், சிலைகள், தாமிர தகடுகள் ஆகியவற்றை மீட்டு இந்தியா கொண்டுவருவதற்காக ஒரு கூட்டு சிறப்பு மீட்பு குழுவை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 2018 செப்டம்பரில் கடிதம் எழுதினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தொல்பொருள் ஆய்வு இயக்குநரகத்திற்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை சொலிசிட்டர் ெஜனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, நமது நாட்டுக்கு சொந்தமான தாமிர தகடுகளை கேட்டு நெதர்லாந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, புராதான சிலைகள், தாமிர தகடுகளை மீண்டும் இந்தியா கொண்டுவருவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வெளிநாட்டு மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ள புராதன சின்னங்களை மீட்க நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: