தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 26 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இலங்கை கடற்படயினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு அவர்களது படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் படகுகள் மற்றும் உபகரணங்கள் அனைத்து இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கி வீணாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அத்துமீறிய இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 25 மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அழைத்து செல்கின்றனர். அவர்கள் தற்போது வரை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே உயர்நீதிமன்றம் விரைவாக அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் முடக்கப்படுவருவதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து நீதிபதிகள்; தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. எனவே அவர்களை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு ஒன்றிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு தமிழகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த வழக்கு ஒன்றிய அரசிடன் அறிக்கை வாங்கி காலதாமதம் செய்வதற்கான அவசியம் இல்லை, இந்த மனுவானது 2 நாடுகளுக்கு சம்பந்தபட்டது. தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான். எனவே அவர்களை விரைந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது என கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.

The post தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: