தூத்துக்குடி, தருவைக்குளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, 23 ஆம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 22 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு கடந்த 5 ஆம் தேதி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும், இரண்டு படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம் நடத்தியதோடு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், மீனவர்களை விடுதலை செய்ய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் முதலில் 12 மீனவர்களுக்கு தலா ரூபாய் ஒன்றரை கோடி, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தலா ரூபாய் 42 லட்சம் அபராதம் செலுத்தவும், அப்படி செலுத்த தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 12 பேருக்கும் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூபாய் 5 கோடியே 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையில் இருக்கிறது. அவர்களுக்கும் அபராத தொகை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த காலங்களில் பலமுறை தமிழக அரசின் சார்பாக எழுதப்பட்ட கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற வகையில் இலங்கை அரசு செயல்படுவதை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் மோடி அரசு வேடிக்கை பார்ப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. இதில் இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்கள், அதிகாரிகள், தமிழக பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இக்குழு கடந்த 2020 ஜனவரிக்கு பிறகு இதுவரை கூட்டப்படவே இல்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை இக்குழு கூடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்படும் போது, இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஹாட்லைன் அமைக்கப்பட்டது. அதுவும் இப்போது செயல்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் மீனவர்கள் பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணப் போகிறார்கள் என்று தமிழக மீனவர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இன்றைக்கு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அபராதம் விதித்ததைப் போல, 8 ஏப்ரல் 2022 மற்றும் 7 ஆகஸ்ட் 2024 இல் இலங்கை நீதிமன்றத்தாலே சிறையில் அடைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, இலங்கை நீதிமன்றத்தால் ரூபாய் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட 12 மீனவர்கள் கட்டணத்தை செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, அபராதம் கட்டுவதிலிருந்து பாதுகாக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மீனவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மோடி அரசு தடுக்க தவறினால் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பான சூழல் உருவாகும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் 12 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!! appeared first on Dinakaran.