பெண்களுக்கான அரசு

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதிபட தெரிவித்திருக்கிறார். குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரிடம் இந்த அரசு தயவு தாட்சண்யம் காட்டாது. உடனடியாக நடவடிக்கை எடுத்திடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது அனைவருக்குமான அரசு என்றாலும், மகளிர் நலன் குறித்த விஷயங்களில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே முதல்வர் கூடுதல் கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். நகர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை என துவங்கி தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை என பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அவர் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி டானியா, தனக்கு உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். முதல்வரின் உடனடி நடவடிக்கையால் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டானியாவுக்கு இரண்டு கட்டங்களாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்வு எழுதி, 4ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். முதல்வர் நேரடியாக மாணவியின் வீட்டிற்கே சென்று, அவரிடம் நலம் விசாரித்தார்.

தற்போது அவர் வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்ந்துள்ளார். அவர் பள்ளிக்கு செல்வதை அறிந்த முதல்வர், ‘‘அன்புள்ள டானியா… பள்ளிக்கு செல்லத் தொடங்கி விட்டாய் என்று அறிந்தேன். மகிழ்ச்சி. ஆசிரியர்களோடு, அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்று அக்கறையுடன் கூடிய அன்புடன் பதிவிட்டுள்ளார். முதல்வராக தன்னை அழுத்தும் பணிச்சுமைகளுக்கு இடையே, சிறுமி டானியாவின் எதிர்காலம் குறித்த அவரது இந்த பதிவு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் மீதான அக்கறையை காட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

விருத்தாசலத்தில் 5 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளித் தாளாளர் பக்கிரிசாமி மீது, தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதை நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அப்போது பேசிய அவர், ‘‘இந்த அரசை பொறுத்த வரையில், நான் செய்தியை கேள்விப்படவில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என்று கூற நான் தயாராக இல்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், மனித குலத்திற்கு ஒரு அவமானச் சின்னம் என நாங்கள் கருதுகிறோம்.

எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். வட மாநிலங்களில் ஆளும் பாஜ கட்சியின் மக்கள் பிரதிநிதிகளும், நிர்வாகிகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து விட்டு, தில்லாக பேட்டி கொடுப்பது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கெல்லாம் இடமில்லை, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் அரசு.

The post பெண்களுக்கான அரசு appeared first on Dinakaran.

Related Stories: