நெல்லை அருகே சேர்வராயன்புதூரில் காலாவதியான மருந்துப் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் வீச்சு-தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லை : நெல்லை அருகே ராமையன்பட்டி அடுத்த சேர்வராயன்புதூர் பகுதியில் காலாவதியான மருந்து பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மூடைகளில் கொண்டுவந்து சாலையோரம் வீசப்பட்டு குவிந்துக்கிடந்தன. பொறுப்பற்றோரின் இந்த விஷம செயலால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அபாயமிகுந்த மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது. மருந்து பொருட்கள் காலாவதியாகி விட்டாலோ அல்லது உபயோகப்படுத்தப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகளாக இருந்தாலோ அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பாக வைத்து தினமும் அகற்றவேண்டும்.

அதற்கென அங்கீகரிக்கப்பட்ட மருந்து கழிவுப்பொருட்களை எடுத்து செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும். இதுபோல் காலாவதியான மருந்து மாத்திரை பொருட்களை மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டும் என்பது போன்ற நியதிகள் உள்ளன. ஆனால் இவ்விதிமுறைகளை ஒரு சிலர் காற்றில் பறக்கவிட்டு பொது இடங்களில் காலாவதியான மருந்து பொருட்களையும், அபாய கழிவுப்பொருட்களையும் வீசிவிட்டு செல்கின்றனர்.

அதாவது நள்ளிரவு நேரங்களில் வாகனங்களில் எடுத்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத சாலையோரங்களில் வீசி செல்வது தொடர்கிறது. இதுபோன்ற சம்பவம் நெல்லை ராமையன்பட்டி அடுத்த சேர்வராயன்புதூர் பகுதியில் நடந்துள்ளது. இச்சாலையில் மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அபாய மருந்து பொருட்கள் காலாவதியான மருந்து பாட்டில்கள் பாக்கெட்டுகளை உடைக்காமல் வீசப்பட்டுக் கிடந்தன.

இதனால் அந்தப்பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுவதாக குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

The post நெல்லை அருகே சேர்வராயன்புதூரில் காலாவதியான மருந்துப் பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் வீச்சு-தொற்று நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: