×

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாபர் சேட் மேல்முறையீடு: தலைமை நீதிபதிக்கு அவசர கடிதம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாபர் சேட் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தலைமை நீதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த 2006-2011ம் ஆண்டில் திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டு மனைகள் தமிழ்நாடு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை கடந்த 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இதையடுத்து சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின்னர் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கடந்த 28ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அவசர கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

The post அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாபர் சேட் மேல்முறையீடு: தலைமை நீதிபதிக்கு அவசர கடிதம் appeared first on Dinakaran.

Tags : Jaber Chet ,Supreme Court ,New Delhi ,Zafar Chet ,Tamil Nadu Housing Board ,Thiruvanmiyur ,
× RELATED ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை...