×

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட நடிகைகள் மிக மோசமான பாலியல் கொடுமைகளை அனுபவித்து உள்ளனர் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை படித்துப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த சிறப்பு விசாரணைக் குழு அவர்களை கண்டுபிடித்து வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் அனுபவிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதில் ஏராளமான நடிகைகள் பாலியல் பலாத்காரத்திற்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் உள்பட முக்கிய பிரமுகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டும் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. முன்னணி நடிகைகளை விட ஜூனியர் நடிகைகள் தான் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து உள்ளனர்.
இந்த நடிகைகளுக்கு முறையான சம்பளம், சாப்பாடு, தங்கும் வசதி உள்பட எந்த வசதிகளும் கிடைக்காது.

குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்திற்கு அவர்களிடம் வேலை வாங்குவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் பெயர், விவரங்கள், புகார் சுமத்தப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நடிகைகளின் புகார்கள் குறித்து விசாரிக்க ஏடிஜிபி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு நியமித்தது. இந்தநிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சமீபத்தில் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

3896 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் சிறப்பு விசாரணைக் குழு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு விசாரணைக் குழு படித்துப் பார்த்தது. அதில் நடிகைகள் அனுபவித்த பல்வேறு பாலியல் கொடுமைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 20க்கும் மேற்பட்ட நடிகைகள் மிக மோசமான பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைக் கண்டுபிடித்து மீண்டும் வாக்குமூலம் பெற சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்து உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களை சந்தித்து விவரங்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரும்பினால் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

The post 20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Investigation ,Thiruvananthapuram ,Hema Committee ,Special Investigation Team ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது