அமலாக்கத்துறை நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ15,183 கோடி பங்கீடு: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்


புதுடெல்லி: அமலாக்கத்துறை நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15,183 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 13,978 கடன் கணக்குகளுக்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 11,483 வழக்குகளில் சார்பாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 5,674 வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் ரூ 33,801 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதில் 2023 டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் 15,186.64 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ரூ. 15,183.77 கோடிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், போன் பேங்கிங் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்மலா சீதாராமன்,’ போன் பேங்கிங் என்பது, அரசியல் தலையீடு. கடந்த 2004 முதல் 2014 வரை நடந்த ஆட்சியின் போது நமது வங்கிகள் அனைத்தையும் கெடுத்து, நஷ்டமடையும் நிலைக்குத் தள்ளியது. போன் பேங்கிங் என்பது அந்த நேரத்தில் வங்கிகளுக்கு போன் செய்து ‘உங்கள் வங்கியில் ஒருவர் கடன் வாங்க வருவார், தயவுசெய்து அதை வழங்குங்கள்’ என்று கூறுவார்கள். அதாவது அவர்களின் தகுதி போன்றவற்றைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடன் வழங்கப்பட வேண்டும் என்பது அர்த்தம்.

2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் போது, ​​கடன் பெற தகுதியில்லாதவர்களுக்கு கடன் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டதுதான் பிரச்னையில் தள்ளியது. இதனால் இந்திய வங்கிகளை சீர்திருத்தங்கள் மூலம் சரிப்படுத்த வேண்டிய சுமை எங்கள் மீது விழுந்தது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில், வணிக வங்கிகளில் செயல்படாத சொத்து (என்ஏபி) கணக்குகளின் எண்ணிக்கை 2.19 கோடியில் இருந்து 2.06 கோடியாக குறைந்துள்ளது. இது 6.2 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல், அத்தகைய கணக்குகளின் மொத்த நிலுவைத் தொகை (மொத்த என்பிஏக்கள்) அதே காலகட்டத்தில் ரூ.7.41 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.72 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

அவைக்குள் பேனர்களை கொண்டு வரக்கூடாது
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ எம்பி ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க கேட்டு டேனிஷ் அலி எம்பி தனது கழுத்தில் பிளக்ஸ் போர்டு தொங்க விட்டு அவைக்கு வந்தார். இந்த நிகழ்வு பற்றி நேற்று சபாநாயகர் கூறுகையில்,’ அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வர மாட்டோம் என, கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. எபிளக்ஸ் பேனர்களை கொண்டு வரும் எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

‘ஒரு கொடி, ஒரு பிரதமர், ஒரே அரசியலமைப்பு’ என்பது அரசியல் முழக்கம் அல்ல: அமித் ஷா
மக்களவையில் நேற்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கூறுகையில்,’ ஒரு கொடி, ஒரு தலைவர், ஒரு அரசியலமைப்பு’ என்பது ஒரு அரசியல் கோஷம்’ என்றார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘அது அரசியல் முழக்கம் அல்ல. ஆனால் அந்தக் கொள்கையை பாஜ உறுதியாக நம்புகிறது. காஷ்மீரில் அதைத்தான் ஒன்றிய அரசு இறுதியாக செயல்படுத்தியது என்று தெரிவித்தார்.

The post அமலாக்கத்துறை நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ15,183 கோடி பங்கீடு: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: