×

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு

கூடலூர்: கூடலூர் பகுதியில் யானைகள் நுழைவதை தடுக்க வனப்பகுதி எல்லையில் வனத்துறையினர் கிராம மக்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானைகள் நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமங்களை ஒட்டிய வன எல்லைகளான தொரப்பள்ளி முதல் போஸ்பாரா வரை அமைக்கப்பட்டுள்ள அகழிகளை பல இடங்களில் யானைகள் சேதப்படுத்தி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து வருவதால், அகழிகளை சீரமைத்து அப்பகுதியில் மின்வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்ட அவ்வப்போது கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அகழி தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, மழை பெய்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மழை ஓரளவு குறைந்துள்ளதால், மீண்டும் பணிகளை துவக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் வன எல்லையான குனில் வயல், ஏச்சம் வயல், அம்பல மூலா கிராமங்களை ஒட்டியுள்ள உள்ள அகழிகளில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் நடவடிக்கையில் வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு பணிகள் வனச்சரகர்கள் விஜய் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Koodalur forest ,KOODALUR ,Mudumalai Tigers Archive Forest ,Nilgiri District ,Sri Madura ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே தேன் வயல் கிராமத்தில்...