உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் பத்திரம் குறித்து நீதி விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல்


புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திர ஊழல் பற்றி தரவுகளை விரிவாக ஆய்வு செய்ததன் மூலம் பாஜவின் 4 ஊழல் தந்திரங்கள் வெளிப்பட்டுள்ளன. அவை, நன்கொடை கொடுத்தால் வியாபாரம் செய்யலாம், பணப்பறிப்பு, லஞ்சம் கொடுத்து அரசு ஒப்பந்தங்கள் பெறுதல், போலி நிறுவனங்களில் இருந்து கொள்ளையடித்தல். தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதில் இருந்து இதுபோன்ற ஊழல்களுக்கு பலப்பல ஆதாரங்கள் வெளிவருவதை காண்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் மிரட்டி எடுக்கப்பட்டு பல ஆயிரம் கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.

உதாரணமாக தேர்தல் பத்திரங்களை அதிகளவில் வாங்கிய 2வது நிறுவனமான மேகா இன்ஜினியரிங், தெலங்கானாவில் உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றான காலேஸ்வரம் லிப்ட் நீர்பாசன திட்டப்பணியை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய பகுதியான மெடிகடா தடுப்பணையின் சில பகுதிகளை மேகா நிறுவனம் கட்டியது. அப்பணி சரியில்லாததால் தடுப்பணை மூழ்கத் தொடங்கியது. இதன் மூலம் வரி செலுத்துவோரின் ரூ.1 லட்சம் கோடி பணம் வீணானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தின் மோர்பியில் இதுபோன்ற தொங்கும் பாலம் அறுந்தது நினைவிருக்கலாம். இப்படி நாடு முழுவதும் தரமில்லாத தடுப்பணைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டதை மறைக்க நடக்கும் முயற்சிகளுக்கு அவற்றை கட்டியது மிகப்பெரிய தேர்தல் பத்திர நன்கொடையாளர்கள் என்பதுதான் காரணமா? கட்சி நிதிக்காக இந்தியர்களின் உயிருக்கு உலை வைப்பதா? தேர்தல் பத்திரம் வாங்கிய பிறகு பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தரமில்லாத மருந்துகளை தயாரிக்கும் பல நிறுவனங்கள் தேர்தல் நிதி தந்ததற்காக இந்திய சந்தையில் அனுமதிக்கப்படுகின்றன. அதிகமான ரூ.1,400 கோடி நிதி தந்த பியூச்சர் கேமிங் ஓட்டல் நிறுவன உரிமையாளரின் மகன் பாஜ உறுப்பினர். கடந்த ஆண்டு ஏப்ரலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளது. அவர் மீது பல சிபிஐ வழக்குகள் உள்ளன. இன்னும் எத்தனை மோசடி நிறுவனங்களுக்கு பாஜவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது? எனவே இந்த அத்தனை ஊழல்கள் குறித்தும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு கூறி உள்ளார்.

கொள்ளை அம்பலம்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘காங்கிரஸ் நாட்டை கொள்ளை அடித்தது என அடிக்கடி குற்றம் சாட்டும் பாஜவின் கொள்ளையை தேர்தல் பத்திரம் அம்பலப்படுத்தி உள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் பாஜ கொள்ளை அடிக்க விரும்புகிறது. அவர்கள் கையில் நாட்டை தரப் போகிறீர்களா?’’ என மக்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

The post உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் பத்திரம் குறித்து நீதி விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: