தேர்தல் வேட்புமனுவை ஆதாரங்களாக கருத முடியாவிட்டாலும் வாக்குமூலமாக கருத முடியும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தேர்தலின் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிராமண பத்திரங்களில் உள்ள தகவல்களை ஆதாரங்களாக கருத முடியாவிட்டாலும் அதனை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ள முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் அர்ஜீன்லால் சுந்தரதாஸ் என்பவர் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் திவாலானவராக அறிவிக்கப்பட்ட அர்ஜீன்லாலின் சொத்துக்களை விற்று முதலீட்டார்களுக்கு திருப்பி கொடுப்பதற்காக சொத்தாட்சியாரும் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அர்ஜீன்லால் தரப்பில் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடன் பெற்றவர்களின் பட்டியல் சொத்தாட்சியர் முன் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2011-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கார்த்தி ரூ.6.25 கோடியும், அவரது மனைவி ரூ.2.75 கோடியும் கடன் பெற்றதாகவும், 2013-ம் ஆண்டு நிலவரப்படி அவர் ரூ.9 கோடி தரவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆதாரமாக 2011-ல் கார்த்தி தாக்கல் செய்த வேட்புமனுவில் இந்த கடன் விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் ரூ.9 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி கார்த்திக்கு உத்தரவிடக் கோரி சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வேட்புமனுவை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என கார்த்திக் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் வேட்புமனுவை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என்ற போதும் வாக்குமூலமாக எடுக்க முடியும் என தெரிவித்தனர். மேலும், கார்த்தி வாங்கிய ரூ.6.25 கோடி கடனை 2013-ம் ஆண்டு முதல் 18% வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post தேர்தல் வேட்புமனுவை ஆதாரங்களாக கருத முடியாவிட்டாலும் வாக்குமூலமாக கருத முடியும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: