×

பேரழிவுகளில் இருந்து தற்காத்து கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: இயற்கை பேரழிவுகளில் இருந்து தற்காத்து கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். வயநாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 440க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,‘‘ வயநாடு நிலச்சரிவு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பேரழிவைத் தொடர்ந்து துக்கத்தில் இருக்கும் நேரத்தில் கேரளாவும் நாடும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால், நாம் சோகமாக இருக்க முடியாது, மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும். எனவே, இந்த ஆண்டு மாநிலத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்யும் கூட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நாடு முன்னேறிய போதிலும்,இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து, அதன் மூலம் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. இயற்கை பேரழிவுளில் இருந்து தற்காத்துக் கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை. உலகின் பிற பகுதிகளில் உள்ள அனுபவங்களில் இருந்து நாம் இதை கற்றுக்கொண்டுள்ளோம்.

நாடு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதே நேரத்தில், நாட்டில் அறிவியல் விழிப்புணர்வு சேதப்படுத்தப்பட்டு வருகிறது.மூடநம்பிக்கைகள், தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் காலாவதியான சடங்குகள் மீண்டும் வருகின்றன. சில சக்திகள் சாதி மற்றும் மதத்தை ஆயுதங்களாகப் பயன்படுத்தி, நாம் கடந்து வந்த இருளை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கின்றன’’ என்றார்.

The post பேரழிவுகளில் இருந்து தற்காத்து கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kerala ,CM ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Chief Minister ,Wayanad ,Dinakaran ,
× RELATED தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்