முன்னுரிமையில் காய்ச்சல் கண்காணிப்பு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்: சுகாதாரத்துறை இயக்குனர் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. பொது இடங்களில் பிளாஸ்டிக், வெற்று பாத்திரங்கள், பயன்படுத்தப் படாத டயர்கள் போன்றவற்றில் தேங்க கூடிய மழை நீரால் வரவிருக்கும் மாதங்களில் மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் வசிக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதத்தில் இருந்து மாவட்டங்களில் வாராந்திர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசு உற்பத்தி கட்டுப்படுத்த ‘இந்த வார முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள்,’ என்ற தலைப்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். அக்டோபர் 4வது வாரம் ரயில்வே யார்டுகள், ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்வே குவார்ட்டர்ஸ் உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். நவம்பர் 1வது வாரம் – வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்பு சுத்தம் செய்ய வேண்டும். நவம்பர் 2வது வாரம்- பொது கட்டிடங்களில் சுத்தம் செய்தல். நவம்பர் 3வது வாரம் ‘காலியான இடங்களில்’ குறிப்பாக பெருநகர சென்னையில் ஏடிஸ் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்து சுகாதார துணை இயக்குநர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post முன்னுரிமையில் காய்ச்சல் கண்காணிப்பு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்: சுகாதாரத்துறை இயக்குனர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: