திண்டுக்கல் அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

திண்டுக்கல்: ஆடி கடைசி வெள்ளி கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு இன்று ஆடுகள் விற்பனையாகின. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் ஆட்டுச்சந்தை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஆடு மட்டுமல்லாமல் கோழியும் விற்பனை செய்யப்படும். திண்டுக்கல் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

நாளை வரும் வெள்ளிக்கிழமை ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், கிராமப்புற கோயில்களில் கிடா வெட்டு அதிகளவில் நடைபெறும். இதையொட்டி இன்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்யவும், வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும் அய்யலூர் சந்தையில் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். 10 கிலோ வெள்ளாட்டு கிடா ரூ.11,000, செம்மறி ஆட்டு கிடா ரூ.6500க்கும் விற்பனை செய்யப்பட்டன. ரூ.3 கோடிக்கு மேல் ஆடு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கூட்டம் அலைமோதியதால், திருச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

The post திண்டுக்கல் அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: