விழுப்புரம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பலர் விஷச் சாராயம் அருந்தியுள்ளனர். இதில் இதுவரை 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே விஷச்சாராயம் அருந்திய 5 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். குறைந்த விலை என்பதால் இவர்கள் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்தது தெரியவந்தது. இரு சம்பவத்திலும் சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ₹10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். நேற்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023 வரை) 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண்.225/2023 ச/பி. 120(b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act 1987-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதோடு, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண்:137/2023, ச/பி 174 Cr.P.C மற்றும் 4(1-A) TNP Act and 284,328,304(ii) IPC மற்றும் குற்ற எண்:138/2023, ச/பி 174 Cr.P.C மற்றும் 4(1-A) TNP Act and 284,328,304(ii) IPC-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளன. 15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் முதலமைச்சர் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்ற செய்யப்படும் என அறிவித்தார்கள். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 16.05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, உத்தரவிட்டுள்ளார்.

The post விழுப்புரம், செங்கல்பட்டு விஷ சாராய வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: