மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.
ரோகித் – இஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. அடுத்து களமிறங்கிய வீரர்கள் சற்று சறுக்கினாலும் இறுதி கட்டத்தில் டிம் டேவிட் – ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- ப்ரித்விஷா களமிறங்கினர். வார்னர் 10 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ப்ரித்வி ஷா – போரல் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும், லலித் யாதவ் 3 ரன்னிலும், குமார் குஷாக்ரா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இறுதி வரை போராடிய ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
The post டெல்லிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி! appeared first on Dinakaran.