அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் சவுக்கு சங்கர் மீது செந்தில்பாலாஜி வழக்கு

சென்னை: அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களில், பல்வேறு யூ டியூப் தளங்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைப் போல தமிழ்நாட்டில் திமுக அரசை நான் கவிழ்த்து விடுவதாக எனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு கற்பனையான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், டாஸ்மாக் பார்களை நான் நடத்தி வருவதாகவும், அதனால் என் மீது திமுகவினர் விரக்தியில் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இதில் எந்த உண்மையும் இல்லை. இதேபோல் டுவிட்டர் பக்கத்தில் எனக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அரசியல் விரோதிகளின் தூண்டுதலின் பெயரில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கரை அவதூறு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். செந்தில்பாலாஜியின் இந்த மனுக்களை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரம் சவுக்கு சங்கர் மீது செந்தில்பாலாஜி வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: