சரவம்பாக்கம் ஊராட்சியில் பழுதான மின் கம்பங்களை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: சரவம்பாக்கம் கிராமத்தில் பழுதான மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் சரவம்பாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின் கம்பங்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.

எனவே பழுதாகி சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு இந்த மின் கம்பங்கள் ஆபத்தான முறையில் உள்ளன. மேலும் சில கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இந்த பழுதான மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என மின்வாரிய துறையினரிடம் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழுதான மின் கம்பங்களால் எப்போது வேண்டுமானாலும் பெரும் அசம்பாவிதம் நேரிடும் என அச்சப்படுகின்றனர். எனவே மின்வாரிய துறையினர் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பழுதான மின் கம்பங்களை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சரவம்பாக்கம் ஊராட்சியில் பழுதான மின் கம்பங்களை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: