செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே, புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து விரைவு ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கல்பட்டு – சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்களும், திருமால்பூர் – சென்னை கடற்கரை செல்லும் துரித மின் தொடர் வண்டியும் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அந்த அளவிற்கு மிக முக்கியமான ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் இருந்து வருகிறது.

இந்தநிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் மாவட்டமான தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், தண்டவாளங்கள் துண்டு துண்டாக உடைந்து விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய நிலை உருவானது.

இதனை தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய இடங்களிலும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட இடத்தில் 50-க்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரயில்வே தண்டவாளம் பழுதடைந்து இருப்பதால் அடிக்கடி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகிறது. எனவே இனி வரும் காலங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக கூடாது என்ற நோக்கில் தெற்கு ரயில்வே சார்பில் ஏற்கனவே பழுதடைந்துள்ள தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் எந்த பாதிபும் இன்றி, வழக்கம் போல் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்: தெற்கு ரயில்வே நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: