கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி; மோடி அரசுக்கு முடிவு கட்ட அடித்த எச்சரிக்கை மணி: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: ‘கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்பது, மோடி அரசுக்கு முடிவு கட்டுவதற்காக அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி’ என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): பாஜவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள். கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக): கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்) : கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்து வந்த பாஜ படுதோல்வி அடைந்ததுள்ளது. ஆர்எஸ்எஸ். – பாஜவின் வஞ்சக சூழ்ச்சிகளை வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்த கர்நாடக மக்கள் வகுப்புவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி, படுதோல்வி அடையச் செய்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகிறது.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): பாஜவின் வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளி நல்லிணக்க அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள கர்நாடக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்குமார்(விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்): கர்நாடக மக்கள் மோடியின் வேஷத்தை தோலுரித்துக் காட்டி விட்டனர். பாஜவுக்கு கொடுத்த தோல்வி என்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் முடிவு அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முடிவுக்கு ஓர் முன்னோட்டம். மோடி அரசுக்கு முடிவு கட்டுவதற்கு அடிக்கப்பட்டிருக்கிற எச்சரிக்கை மணி தான் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் முடிவாகும்.

The post கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி; மோடி அரசுக்கு முடிவு கட்ட அடித்த எச்சரிக்கை மணி: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: