நவராத்திரி வந்து விட்டாலே இந்த வருடம் கீதா ரமேஷ் அவர்களின் வீட்டில் என்ன மாதிரியான அமைப்பில் கொலு இருக்கும் என்ற ஆர்வம் சேலம், செவ்வாய்ப்பேட்டை மக்கள் மனதில் கேள்வியாக எழும். காரணம், கீதா அவர்களின் வீட்டில் ஒவ்வொரு வருடமும் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பு. அதாவது அவர்கள் வீட்டு கொலுவில் படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைப்பது மட்டுமில்லாமல், அவர்களின் கொலு முழுக்க முழுக்க தெய்வீக அம்சத்துடன் பார்ப்பவர் கண்களைக் கவர்ந்து மனதை நிறைக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பழமையான ஆன்மீக வரலாறுகளை அழகாக வடிவமைத்து வைத்திருப்பார்கள் இந்த தம்பதியினர். ஒவ்வொரு வருடமும் புதுப்புது தீம்களை சிந்தித்து அதை அழகாக அமைக்க பல நாட்கள் செலவு செய்து குடும்பமாக நவராத்திரி பண்டிகையினை கொண்டாடி வருகிறார்கள்.
‘‘திருமணம் முடிந்து ஏழு வருஷமிருக்கும், நவராத்திரிக்கு சில நாட்கள் முன் என் கனவில் சர்வ அலங்காரத்துடன் அழகிய பெண் ஒருவர் சிங்கம் மீது அமர்ந்து வந்து “உன் வீட்டுக்கு நான் வருகிறேன்” என்று சொல்வது போலவும் நான் பொம்மைகளை அடுக்குவது போலவும் கனவு வந்தது. கனவுதானே என அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப எனக்கு அதே கனவு வந்தது. அதன் பிறகு தான் அந்தக் கனவு. எதையோ நமக்கு உணர்த்துகிறது என்று புரிந்தது. அதைப் பற்றி நான் என் கணவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
எங்க வீட்டில் கொலு வைப்பது பழக்கம் இல்லை. ஆனால் இந்தக் கனவு என்னை ரொம்பவே பாதித்ததால், அந்த வருடம் கண்டிப்பாக வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். என் கணவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் வீட்டில் பெரியவர்கள் எல்லாரும் உன்னால் பத்து நாட்கள் விரதம் இருந்து அதைக் கடைப்பிடிக்க முடியுமான்னு கேட்டாங்க. முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும்ன்னு நான் அந்த வருடம் கொலு வைக்க முடிவு செய்தேன்.
நாங்க இருப்பதோ வாடகை வீடு என்பதால் சிறிய அளவில் மூன்று படிக்கட்டுகளில் கொலு வைத்தேன். அப்படித் துவங்கியதுதான் இந்தக் கொலு. அப்ப எனக்கு 26 வயசுதான். கையில் சிறு சிறு குழந்தைகள். ஆனாலும் விரதம் இருந்து பத்து நாட்கள் தெரிந்த முறையில் சிறிய அளவில் வைத்த கொலு இன்று சொந்த வீட்டில் பெரிய அளவில் பதினைந்து வருடங்களைக் கடந்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது என்றால் அந்த அம்மன்தான் முழுக் காரணம். இதெல்லாம் முன் வினைக் கொடுப்பினை என்றுதான் பெரியவர்கள் சொல்கிறார்கள்’’ என்றவர் கான்செப்ட் கொலு அமைத்தது பற்றி விவரித்தார்.
‘‘எனக்கு கைவினைக் கலை செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. முதல் வருடம் மூன்று படிக்கட்டுகளில் கடையில் வாங்கிய பொம்மைகள் கொண்டுதான் கொலு வைத்து வழிபட்டோம். அடுத்த வருடம் இதே போல் இல்லாமல் வித்தியாசமாக வைக்கலாம்ன்னு யோசித்தேன். வெறும் பொம்மைகள் மட்டும் இல்லாமல் நாமே ஏதாவது ஒரு தீமை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. பள்ளியில் படிக்கும் போது சின்னச் சின்ன பிராஜக்ட் செய்யச் சொல்வார்கள்.
அதை நான் அப்படியே செய்வேன். அதனால் அடுத்த வருடம் பெரிய இமயமலையை நாங்களே உருவாக்கி அதில் கங்கை உற்பத்தியாவது போன்று நீர் வழிய கொலுவில் வைத்தோம். அந்த வருடம் வீட்டிற்கு கொலு பார்க்க வந்தவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே பிடிச்சு போனது. அதனால் அடுத்த வருடமும் நான் வித்தியாசமாக வைப்பேன் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் நினைக்க ஆரம்பித்தனர்.
நான் இந்த வருடம் என்ன புதுமையாக வைத்திருக்கிறேன் என்று பார்க்கவே வருவார்கள். நானும் ஒவ்வொரு வருடமும் புதிதாக ஏதாவது ஒன்றை கொலுவில் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டு வந்தேன். அடுத்த வருடம் பழனி மலை போல் அமைத்து அதில் ரோப் கார் மற்றும் நீர்வீழ்ச்சி சேர்த்தோம். நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போல் நீர் மின் நிலையமும் அருகில் அமைத்தோம். இதன் மூலம் கொலு பார்க்க வந்த குழந்தைகள் தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகும் முறையினை தெரிந்து கொண்டார்கள்’’ என்றவர் தற்போது வேதங்களை கொண்டு கொலு அமைத்து வருகிறார்.
‘‘என் கணவருக்கு வேதங்களில் ஆர்வம் அதிகம். அவர்தான் நல்ல ஆன்மீக செய்தியை கொலு மூலம் சொல்லலாம் என்று சொன்னார். அதனால் அதற்கான தேடலில் இறங்கினோம். அது குறித்து நிறைய ஆய்வு செய்தோம். மகாபாரதத்தில் காந்தாரிக்கு துரியோதனன் உட்பட நூறு குழந்தைகள் பிறந்த வரலாறு எங்களை ஈர்த்தது. காரணம், செயற்கை முறையில் கருத்தரிப்பு அதிக அளவு பிரபலமாகி இருந்த காலம் அது. அதையே ஏன் நாம் கொலுவில் வடிவமைக்கக்கூடாது என்று காந்தாரி மற்றும் நூறு குழந்தைகளைக் கொண்டு அந்த வருட கொலுவினை வடிவமைத்தோம். கொலுவினைப் பார்க்க வந்தவர்களுக்கு காந்தாரிக்கு குழந்தை பிறந்த கதையைப் பற்றியும் விவரித்தோம்.
சொல்லப்போனால், “உலகத்தின் முதல் டெஸ்ட்டியூப் குழந்தை துரியோதனனும் அவன் சகோதர்களும்தான்” என்று சொன்ன போது அனைவரும் வியந்து அந்த கதையினை கேட்டார்கள். நாங்க சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று நினைக்கும் போது மனதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அடுத்த வருடம் பகவத்கீதையின் கர்மயோகங்களை அமைத்திருந்தோம். அதுவும் மக்களை மிகவும் ஈர்த்தது. சென்ற வருடம் தசமகாதேவியரான மாகாளி, தாரா, லலிதா, திரிபுரசுந்தரி, பைரவி, பகுளாமுகி, கமலாத்மிகா, தூமாவதி, மாதங்கி, சின்னமஸ்தா ஆகியோரை வடிவமைத்தோம். இதற்காக நான் மட்டுமில்லை, என் கணவர், மகள், மகன் என அனைவரும் பல நாட்கள் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். சார்ட் பேப்பரில் உருவங்களை வரைந்து வண்ணங்கள் தீட்டி அசுரனை மகாகாளி வதம் செய்வது போல் அமைத்தோம். அது பலரையும் கவர்ந்தது.
இந்த வருடம் பதினெட்டு சித்தர்களில் போகர், அகத்தியர், கருவூரார், திருமூலர், கொங்கனார், காலங்கிநாதர், பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி முனிவர் போன்றவர்களின் உருவங்களை அவர்கள் வாழ்ந்த இடங்கள் மற்றும் சம்பவங்களுடன் வடிவமைத்து உள்ளோம். உதாரணமாக போகர் என்றால் பழனி மலை நினைவுக்கு வரும். பழனி குகையில் நவபாஷாண சிலையை வடிவமைப்பது போல் சித்தரித்துள்ளோம். வரலாறு அடிப்படையில் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன் ஆசிவகம் எனும் சமயம் தழைத்திருந்த போது இரு தரப்பினரிடையே உருவ வழிபாடு குறித்த விவாதம் ஏற்பட்டது. அதில் உருவ வழிபாடு தேவை இல்லை என்று சொன்ன சித்தர்களுக்கு மரண தண்டனையாக கழுமரம் ஏற்றம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிகழ்வினை சித்திரங்களாக வரைந்து இருக்கிறோம். அடுத்து பழனி முருகனின் தங்கத் தேர் தத்ரூபமாக வடிவமைத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் தனிப்பட்ட கான்செப்ட் என்பதால், அந்த பத்து நாட்களுக்கு பிறகு நாங்க வடிவமைத்த பொம்மைகளை நீக்கிடுவோம். மிகவும் சிரமத்துடன் செய்து இருப்பதால் அதை நீக்கும் போது மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சிலர் அதை விரும்பி கேட்பார்கள். அவ்வாறு கேட்பவர்களிடம் கொடுத்திடுவோம்’’ என்றவர் பொம்மைகள் பராமரிப்பு குறித்து விவரித்தார்.
‘‘பொம்மைகளை காகிதத்தில் சுற்றி ஒன்றோடு ஒன்று உரசாதபடி ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து நவராத்திரி முடிந்ததும் பரனில் கட்டி வச்சிடுவோம். அப்படி வைக்கும் போது, அந்த பொம்மைகள் அடுத்த வருடம் இறக்கும் போது அப்படியே புதிதாக இருக்கும். பொம்மைகளில் உள்ள மணி மற்றும் துணிகள் பாதிக்கப்பட்டு இருக்கும். அதற்கு வேறு துணி தைத்திடுவேன். சில சமயம் பொம்மையின் நிறம் மங்கி இருக்கும்.
அப்போது புதிதாக பெயின்ட் அடிப்பேன். எங்க வீட்டின் கொலுவிற்கு வந்த பலர் தங்களுக்கு சில காரியம் நடக்க வேண்டும் என்று வேண்டி செல்கிறார்கள். அவர்களுக்கு அது நிறைவேறிவிட்டது என்று கூறும் போது அம்மன் அவர்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டிருப்பது, மனதுக்கு நிறைவாக உள்ளது. ஆன்மீகமோ அறிவியலோ கடமைக்கு சுயநலத்துடன் செய்யாமல் மற்றவர்களின் நலனுக்காக செய்யும்போது அதற்கான மதிப்பு பெறுகிறது’’ என்றார் கீதா.
பொம்மைகள் பலவிதம்
நவராத்திரி என்றாலே பொம்மைகள்தான் பிரதான இடம் பிடிக்கும். கொலு என்றால் அழகுதானே. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கொலுப்படிகள் அமைத்து வண்ண வண்ண சிலைகளிலிருந்து பலவித பொம்மைகள் அமைப்பது வழக்கம். நம் நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கென்று ஒவ்வொரு வகையான பொம்மைகள் பிரபலம். அவற்றில் சில வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
* எட்டி கொபக்கா (ஆந்திரா), கொண்டபள்ளி (ஆந்திரா), இன்னஸ் (கர்நாடகா), சன்னபட்டினம் (கர்நாடகா), தஞ்சாவூர் (தமிழ்நாடு), காஞ்சிபுரம் (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களில் மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது.
* மரப்பாச்சி பொம்மைகள், சன்னபட்டினம் பொம்மைகள் என அவற்றின் பாரம்பரியம் தொன்மையானது. இவை யானை மரம், நூக்கமரம் மற்றும் சந்தன
மரத்தால் செய்யப்படுபவை.
* தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும். இந்திய அரசால் 2008-2009ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது.
* ஆந்திரா, கொண்டபள்ளியில் பசுஞ்சாணம், மரத்தூள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொம்மைகள் பிரபலமானது.
* கேரள மாநில பொம்மைகள் கதகளி மற்றும் அலங்கரிக்கப்பட்ட யானை பொம்மைகள், கிருஷ்ணன் பொம்மைகளை பிரதிபலிக்கின்றன.
* ராஜஸ்தானில் சுட வைக்காத மண்ணில் பொம்மைகள் செய்வார்கள். இது மதுபாணி பொம்மைகள் என பெருமை வாய்ந்ததாக விளங்குகின்றன.
* வட இந்தியாவில் குழந்தையுடன் கூடிய தாய் பொம்மை பிரபலம். வாரணாசி, லக்னோ, மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களில்
மரத்தால் செய்த பொம்மைகள் பிரபலம்.
* ராஜஸ்தானில் புல்லில் பொம்மைகள் அழகுற வடிவமைக்கின்றனர். பேப்பர் கூழ் பொம்மைகள் சீனாவில்தான் முதன் முதலில் செய்யப்பட்டன.
* கொகேஷி ஜப்பானிய பொம்மைகள். இவை மரத்தைக் கொண்டு கைகளால் செய்யப்படுபவை. பெரிய உருண்டை தலை, கை, கால் இல்லாத உருளை உடல் அதில் வண்ணக்
கோடுகள் வரையப்பட்டிருக்கும். இதை வீட்டில் வைத்திருந்தால் தீ விபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.
தொகுப்பு: சுபா
The post கான்செப்ட் கொலுவில் கலக்கும் சேலம் தம்பதி! appeared first on Dinakaran.