‘பேடிஎம்மில் ரூபாய் 50 பெறப்பட்டது!’
இந்தக் குரலை நாம் அனைவரும் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். அதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி. இன்று யாருடைய கையிலும் பர்சுகள் இருப்பதில்லை. பத்து ரூபாய் டீ முதல் 5 ஸ்டார் ஓட்டல் கட்டணம் வரை அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறிவிட்டது. இதில் பெரும்பாலானோர் அதிகளவில் பயன்படுத்துவது பேடிஎம் முறைகள்தான். நாம் ஒவ்வொரு முறை கட்டணம் செலுத்தும் போதும் ‘ரூபாய் பெறப்பட்டது’ என்ற ஒரு குரல் ஒலிக்கும்.
அந்தக் குரல் பதிவு செய்யப்பட்டதுதான் என்றாலும், அந்தக் குரலுக்கு சொந்தக்காரர்கள் உமா மற்றும் மகேஸ்வரி என்ற இரட்டை சகோதரிகள். பேடிஎம் எப்படி நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்திருக்கிறதோ அதே போல் இவர்களின் குரலும் நம்முடைய அன்றாட வாழ்வில் இணைந்திருக்கிறது. இவர்களின் குரல் நம்முடன் இணைந்த பயணம் குறித்து பேசத் துவங்கினார் இரட்டையரில் ஒருவரான உமா.
‘‘நான் பேடிஎம்மின் பேரண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அவர்களின் பல திட்டங்களில் நான் வேலை பார்த்த போதுதான் எனக்கு இந்த வாய்ஸ் ஓவர் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னுடைய அந்தக் குரல் மக்கள் மத்தியில் இவ்வளவு இணையும் என்று நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் தங்கையான மகேஸ்வரி.
‘‘முதலில் உமாவிற்குதான் வாய்ஸ் ஓவர் கொடுக்க வாய்ப்பு வந்தது. அப்போது நாங்க இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். எங்களின் நண்பர் ஒருவர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு உமாவிற்கு கிடைத்தது. அந்த சமயத்தில் எனக்கும் அதே துறையில் வங்கி, செல்போன் போன்ற நிறுவனங்களுக்கு வாய்ஸ் ஆர்டிஸ்டுக்கான வாய்ப்பு வந்தது. நாங்க இரட்டையர்கள் என்றாலும் வேறு வேறு கல்லூரியில்தான் படித்தோம். ஆனால் பாருங்க எங்க இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வேலை வாய்ப்பு தேடி வந்தது. அனைத்து செல்போன் நெட்வொர்க், மால்களில் அறிவிப்பு, நகைக் கடைகளின் விளம்பரங்களுக்கும் நாங்க குரல் கொடுத்திருக்கிறோம். எங்க இருவரின் குரல் 5000க்கும் மேற்பட்ட பிராஜக்டுகளை முடித்திருக்கிறது.
ஒரு வாய்ப்பு கிடைத்து அதை நாம் நன்றாக செய்தால், அந்த உழைப்புக்கான பலன் நம்மை தொடரும்னு சொல்வாங்க. எங்க வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது. எங்களின் குரல் அனைவருக்கும் பிடித்துப்போக, ஒருவர் மூலமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. ஆரம்பத்தில் இதற்கான ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில்தான் நாங்க வேலை பார்த்து வந்தோம். அங்கு அனைத்து ரெக்கார்டிங் வசதிகளும் இருக்கும். லாக்டவுனுக்குப் பிறகு அதையே நாங்க எங்க வீட்டில் அமைத்தோம்.
இப்போது நாங்க இதனை தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம். குரலை ரெக்கார்டிங் செய்து அதனை அமைக்க தனிப்பட்ட சாஃப்ட்வேர் உள்ளது. அதன் பயன்பாட்டையும் கற்றுக் கொண்டதால், வீட்டில் இருந்தபடியே தேவையான குரலை நாங்க ரெக்கார்ட் செய்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனுப்பி வருகிறோம்’’ என்றவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் குரல் கொடுக்கிறார்களாம்.
‘‘எங்க இருவரில் உமாவின் குரல்தான் இனிமையா இருக்கும். அவளுடையது மெல்லிய குரல். என்னுடையது பேஸ் வாய்ஸ். அதனால் கன்டென்டுக்கு ஏற்ப இருவரும் குரல் கொடுப்போம். சில
சமயம் நாம் எதிர்பார்த்த குரல் வராது. அந்த சமயத்தில் பிராக்டீஸ் செய்து அதன் பிறகு ரெக்கார்டிங் செய்வோம். என்னுடைய குரல் பேஸ் வாய்ஸ் என்பதால், என்னுடைய குரல் சரியா இல்லைன்னு நான் யோசிப்பேன். அந்த சமயத்தில் அக்கா தான் என்னை உற்சாகம் செய்வார்.
மேலும் என்னுடைய குரல் வித்தியாசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பும் என்னைத் தேடி வந்தது. நாங்க வாய்ஸ் ஓவர் கொடுத்து வந்ததால் டப்பிங் செய்வதற்கான வாய்ப்பு வந்தது. டப்பிங் யூனியன் கார்டு எடுக்காத காரணத்தால் எங்களால் அப்போது பேச முடியவில்லை. இப்ப அக்கா கார்டு எடுத்துள்ளார். வாய்ப்பு வரும் போது செய்து தருகிறோம். ஓ.டிடியில் வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் ஹார் படங்களுக்கும் டப்பிங் கொடுக்கிறோம்.
நாங்க இதற்காக எந்தப் பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் சத்தமாகவும் ஏற்ற இறக்கங்களுடன் குறிப்பாக ஆங்கில பாடங்களை படிக்க சொல்வார்கள். அது தான் எங்களின் முதற்கட்ட பயிற்சின்னு சொல்லணும். அதன் பிறகு வேலைக்கு சேர்ந்தவுடன் எங்களின் குரலை நாங்களே மெருகேற்றிக் கொண்டோம். மேலும்
பிரிலான்ஸ் முறையில் செய்வதால், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப எங்களின் நேரத்தை அட்ஜஸ்ட் செய்து வேலையை முடித்து தர முடிகிறது’’ என்றவர் வாய்ஸ் ஓவர் குறித்து வர்க்ஷாப் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருவதாக தெரிவித்தார்.
‘‘இந்த துறையை பொறுத்தவரை பலர் குரல் கொடுக்கிறார்கள். ஒவ்வொருவரின் குரல் ஒவ்வொரு விதமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த குரல் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். சிலர் தங்களின் ஒரிஜினல் குரலை இதற்காக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்கு ஏற்ப குரல் கொடுக்கலாமே தவிர நமக்கான அடையாளமான நம் குரலை இழந்துவிடக்கூடாது என்பதில் நானும் அக்காவும் ரொம்பவே உறுதியா இருக்கிறோம்.
நாங்க தற்போது பாட்காஸ்டர், வாய்ஸ் ஓவர், பேடிஎம், மொபைல் ஜாக்கி, சினிமா மற்றும் சீரியல்களுக்கு டப்பிங், காபி ரைட்டர் என அனைத்தும் செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை குரல் சார்ந்த அனைத்து துறையிலும் எங்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதுதான். எங்களின் அடையாளமே குரல்தான். அதை பார்வையற்ற பெண்மணி ஒருவர் தான் எங்களுக்கு உணர்த்தினார். ஆரம்ப காலத்தில் நாங்க இந்த துறையில் வளர்ந்து வந்த போது, ஒரு பார்வையற்ற பெண்மணி எங்களை பார்க்க வேண்டும் என்று எங்க ஸ்டுடியோவிற்கு வந்தார்.
அவரால் எங்களை பார்க்க முடியாது, ஆனால் எங்களின் குரல்தான் அவருக்கு எங்களை அடையாளம் காட்டியது. எங்க குரலால் ஈர்க்கப்பட்டு நேரில் வந்து சந்தித்த தருணம் இன்றும் மறக்க முடியாது. இது போல் பலரின் வாழ்க்கையில் நாங்க இணைந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது மனசுக்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் உள்ளது’’ என்றனர் கோரஸாக இரட்டை சகோதரிகள்.
தொகுப்பு: சித்ரா சுரேஷ்
The post பேடிஎம் குரலுக்கு சொந்தமான இரட்டை சகோதரிகள்! appeared first on Dinakaran.