கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* மைசூர்பாகு செய்யும் போது ஒருபங்கு கடலை மாவு, 2 பங்கு பயத்த மாவு சேர்த்தால் வாயில் போட்டவுடன் கரைந்திடும்.

* தேன் குழல், சீடை மாவில் சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது.

* ரவா லாடு செய்யும் போது, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். வாசனையாக இருக்கும்.

* பக்கோடா செய்யும் போது கடலை மாவை தவிர்த்து விட்டு பொட்டுக் கடலை மாவு போட்டுப் பாருங்கள். ருசியும் பிரமாதமாக இருக்கும். வயிறு கோளாறும் ஏற்படாது.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* உளுந்து வடை செய்யும்போது, ஒரு கை சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உள்ளே மெத்தென்றும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மாவுடன் சேர்த்து அரைத்துத் தட்டினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

* மோர்க்குழம்புக்கு புளித்த மோர் இல்லையென்றால், மூன்று புளிப்பான தக்காளியை மோர்க் குழம்புக்குத் தேவையான சாமான்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்து
விடும்.

* கொத்தமல்லி மலிவாக கிடைக்கும்போது நறுக்கி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து ரசத்தில் பொரித்துப்
போடலாம்.

* சாதம் குழைந்துவிட்டால், பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பிறகு வடித்தால் சாதம் பூப்போல் ‘பொல பொல’ வென இருக்கும்.

– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.

* அரிசியில் பூச்சி மற்றும் பழைய வாசனை போக, வேகும்போது ஏலக்காயை நசுக்கிப் போட்டால் நெடி நீங்கி விடும்.

* எந்த வகை காய் பொரியல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டைச் சீவி துருவலை உடன் சேர்த்தால் அதன் ருசியே அலாதிதான்.

* ரவை உப்புமா செய்யும்போது சிறிதளவு சேமியாவைச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* பஜ்ஜி மாவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை கலந்து செய்தால் பஜ்ஜி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

– கீதா ஹரிஹரன், கேரளா.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, கொஞ்சமாக புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் மீந்துபோன வெண்பொங்கலைக் கொட்டி கிளறி, சாம்பார் சாதமாக சாப்பிடலாம்.

* முந்திரி, திராட்சைக்கு பதிலாக தேங்காயை நறுக்கி நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்த்துவிட்டால் சுவை அதிகரிக்கும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு தக்காளியை அதில் போட்டு வைத்தால் தக்காளி அழுகாமல் இருக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

* நாள் கிழமைகளில் மங்கள அட்சதை உபயோகப்படுத்துவோம். பூஜை செய்த பிறகு அதை தூக்கி எறியாமல் அரிசி டப்பாவில் போட்டு கலந்துவிட்டால் பூச்சி வராது.

* கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் அவசரத்துக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

* துவரம்பருப்பை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டால் அவசரமாக ரசம் செய்ய வேண்டுமென்றால் இதை உபயோகித்துக் கொள்ளலாம்.

– ராஜிகுருசாமி, சென்னை.

* உருளைக்கிழங்கு மசியல் செய்யும் போது, கிழங்கை முதலில் வேகவைத்து, தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் சிறிது வெண்ணெய், கடலைமாவு, அரிசிமாவு சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி நிதானமான சூட்டில் வறுத்துச் சாப்பிட சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

* பீட்ரூட்டை சிறிது நேரம் வேகவைத்து பின்பு நறுக்கினால் தோல் உரிந்து மிகவும் சுலபமாக நறுக்கவும் வரும்.

* காபிப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் பல நாட்களுக்கு மணமும், சுவையும் மாறாமல் குறையாமலும் இருக்கும்.

– அனிதா நரசிம்மராஜ், மதுரை.

சப்பாத்தி மென்மையாக இருக்க டிப்ஸ்!

* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
* சப்பாத்தி உருட்டும்போது அதனை நாலாக மடித்து உருட்டினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
* சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
* கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு வராது.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சுடு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
* சப்பாத்தி மென்மையாக இருக்க சப்பாத்தி மாவை கலக்கும் போது பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி சேர்க்கவும்.
* சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மென்மையாக உப்பி வரும்.

– ஏ.எஸ்.ேகாவிந்தராஜன், சென்னை.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.