போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதலாக பயிற்சி மையங்கள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

கொடைக்கானல்: பழங்குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் கூடுதல் பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை சார்பில் உலக பழங்குடியினர் தின விழா நேற்று நடந்தது. இத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் லட்சுமி பிரியா தலைமையும், இயக்குநர் அண்ணாதுரை மற்றும் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையும் வகித்தனர். விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில்,

இந்த ஆண்டு ஆதிவாசி, பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் 25 பேர் உயர் படிப்பிற்கு சென்றுள்ளனர். 146 பேருக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. பழங்குடியின, ஆதிதிராவிடர் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகும் விதமாக கூடுதலாக பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இந்த ஆண்டு 4,500 வீடுகள் கட்டி தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியின, ஆதிவாசி மக்கள் குழுவாக இருந்தால் அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எளிதாக கிடைக்கும்.

எனவே இம்மக்கள் குழுக்களை ஏற்படுத்தி அரசின் திட்டங்களை பெற முயற்சிக்க வேண்டும். புவியியல் தரவுகள் அடிப்படையில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை சர்வே செய்து அவர்களின் அடிப்படை தேவைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.

The post போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதலாக பயிற்சி மையங்கள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: