திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை தொகையை வசூலிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் கூறினார்.திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார்.கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வரும்மாறு:
ரவிச்சந்திரன்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வேலை செய்து வருகிற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.ஆண்டு முழுவதும் வேலை செய்கிற இவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களை போன்று வழங்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ்: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்பட்டு மீதம் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவசர சிகிச்சை மேற்கொள்ள சென்றால் இ.எஸ்.ஐ.யில் செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்.
தங்கராஜ்: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. முழுப்பயணும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒப்பந்ததாரர்களை நம்பி பணிக்கு வருகிறார்கள்.அவர்களுக்கு குடியிருக்க வீடுகளும் கிடைப்பதில்லை. இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மாவதி:ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையுடன் இ.எஸ்.ஐ. எண்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.பலர் இ.எஸ்.ஐ. எண்கள் தெரியாமல் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாந்தாமணி: வார்டுகளுக்கு குப்பை சேகரிக்கிறவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதன் காரணமாக குப்பைகள் காற்றில் அங்கும், இங்குமாக பறக்கின்றன. இதுபோல் ஆண் பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். சம்பள உயர்வும் வழங்க வேண்டும்.
குணசேகரன்: குப்பைகள் வாங்க வருகிறவர்கள் தாமதிப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. இதனால் விரைவாக வந்து குப்பைகளை வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் வார்டு தோறும் கவனிக்க வேண்டும்.
நாகராஜ்: பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.தொழில் வரி உள்ளிட்டவைகளை குறைக்க வழிமுறைகள் உள்ளதால் அதனை விரைவாக குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பலர் பயன்பெறுவார்கள். கூடுதலாக தெருவிளக்குகள் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்களை பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்த வேண்டும்.
தமிழ்செல்வி: விளக்குகளின் வாட்ஸ் தரத்தை அதிகப்படுத்த வேண்டும். வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவிதா: வார்டு பகுதிகளுக்கு அதிகாரிகள் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காமல் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்செல்வி: சாமுண்டிபுரம், வளையங்காடு, எஸ்.ஏ.பி. தியேட்டர் மற்றும் பெரியார்காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட வார்டுகளில் பெய்யும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து மொத்தமாக 16 வது வார்டு பகுதியில் உள்ள கவிதா நகர், ஜே.ஜே.நகர், கே.ஜி.நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாத்திமா தஸ்ரின்: 45 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் குடிநீர் விரயமாகிறது. இதுபோல் குடிநீர் குழாய் பணிக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டி அப்படியே விட்டுள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும்.
கவிதா நேதாஜி கண்ணன்: பலவஞ்சிபாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தை புனரமைத்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 4 வது குடிநீர் திட்ட பணிகளில் விடுபட்ட பகுதியை இணைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பேசினர்.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதத்தில் ஏராளமான பல பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செய்துள்ளோம். 164 சாலைகள் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புனரமைக்கப்பட்டுள்ளது.விடுபட்ட பகுதிகளையும் சேர்த்து 39 கிலோ மீட்டர் துரத்திற்கு புனரமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டங்களை பொறுத்தவரை மாநகர பகுதியில் குடிநீர் குழாய்களில் மாநகரில் மட்டும் 3454 லீக்கேஜ் உள்ளது. இதில் 2863 லீக்கேஜ் சரி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள லீக்கேஜ்கள் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து லீக்கேஜ்களும் சரி செய்யப்படும்.புதிய தெருவிளக்குகள் பல்வேறு பகுதிகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2374 தெருவிளக்குகள் அமைக்க விண்ணப்பம் வந்துள்ளது. இதில் 819 தெருவிளக்குகள் அமைக்க ரு.24 லட்சம் ருபாய் மின்வாரியத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விளக்குகளும் விரைவாக அமைக்கப்படும்.
மழைக்காலம் தொடங்கிய நிலையில் சாக்கடை கால்வாய் துர்வாரும் பணி தீவிரமாக உள்ளது. மாநகரில் சுகாதாரத்தை பேணும் வகையில் நாள் ஒன்றுக்கு 754 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.பொது சுகாதாரத்துறை வாயிலாக 3 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 3200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.
25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுநிதியில் இருந்து பணிகள் நடந்து வருகிறது. 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் உள்ளனர்.
குடிநீர் வினியோகத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை மாநகராட்சி எட்டியுள்ளது. 70 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 60 தொட்டிகள் முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நீரேற்றம் வழங்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள குடிநீர் தொட்டிகள் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.சில வார்டுகளில் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது அந்த நிலை மாறி 6 நாட்கள் என வந்துள்ளது. மாநகராட்சி முழுவதும் 4 நாட்கள் முதல் 6 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கோவில்வழியில் பஸ் நிலைய பணிகள் விரைவில் முடிய உள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதலாக 150 க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.3.45 கோடி மதிப்பில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் பல பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களை சரி செய்ய ரூ.1.10 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.4-வது குடிநீர் திட்ட பணிகள் முடிக்கவில்லை என்றால் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம்.விடுபட்ட பகுதிகள் இணைக்கப்படும். 6 மாநகராட்சிகளில் விதிக்கப்படுகிற வரிகள் குறித்து ஒப்பீடு செய்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உரிய அனுமதியை பெற்று வரி மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் மற்றும் வாடகை கட்டிடங்களில் வாடகை வசூல் மற்றும் நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்கவும்,கண்காணிக்க புதியதாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட உள்ளோம்.
இதுபோல் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை அதிகப்படுத்த உள்ளோம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். கவுன்சிலர்கள் கொடுக்கிற புகார்களை அதிகாரிகள் அலட்சியபடுத்தக்கூடாது. பொறுப்புடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். வார்டுகளில் காலை 6 மணிக்கு குப்பை சேகரிப்பாளர்கள் வந்து குப்பைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்திற்குள் அனைத்து சாக்கடை கால்வாய்களும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகையை வசூலிக்க கமிட்டி appeared first on Dinakaran.