கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 2 படகையும் அதிலிருந்த 23 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை சிறையில் அடைத்தனர். அதே போல் இன்று மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 12 பேரையும் ஒரு படகையும் சிறைபிடித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைக்க உள்ளனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைபிடித்து வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்றிய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இலங்கை சிறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்களில் குறிப்பாக 6 மாதம், ஒரு ஆண்டு, 3 மாதம் என 50 மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் பல்வேறு சித்திரவதை அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் பிரச்சனை இல்லாமல் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இத்தகைய சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இத்தகைய போராட்டம் பிரச்சனை தடுக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் வாகனங்களும், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.