கோவையில் சாகுபடி தீவிரம் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை : தமிழ்நாட்டில் வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி தக்காளி சுமார் 0.34 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 11.99 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதில், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி விவசாயம் செய்யப்படுகிறது.

தக்காளியில் பூச்சி தாக்கம், நோய் தாக்கம், விலை சரிவு உள்ளிட்ட பல காரணங்களினால் பெரிய அளவில் வருவாய் கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தவிர, தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் செடியில் இருந்து தக்காளியை பறித்து அதனை மார்க்கெட்டிற்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த வாரங்களில் தக்காளியின் விலை கிலோ ரூ.10க்கு விற்பனையாகி வந்தது.

இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனால், தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் பூலுவாம்பட்டி சந்தைகளில் தக்காளியை விற்பனை செய்ய ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் பல ஏக்கரில் தக்காளி சாகுபடி நடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தக்காளி செடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான செடிகள் கருகியுள்ளன. தவிர, செடியில் உள்ள பூக்கள் மற்றும் பிஞ்சு காய்கள் வீணாகியுள்ளது. இதனால், உடனடியாக காய்களை பறித்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை சந்தையில் குறைந்து காணப்பட்டது. கிலோ ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. இதனால், பெரிய அளவில் லாபம் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால், தற்போது 15 கிலோ எடைகொண்ட பெட்டி ரூ.470-க்கு விற்பனையாகிறது. அதாவது கிலோ ரூ.30 முதல் ரூ.31க்கு விற்பனையாகிறது. இது அடுத்த சில நாட்களில் உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே, தக்காளியை பறித்து விற்பனை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 100 நாள் வேலைக்கு பலர் செல்வதால் விவசாய தொழிக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. தவிர, கூலிக்கு வரும் நபர்கள் தங்களின் சம்பளத்தை உயர்த்தி கேட்கின்றனர். தினக்கூலியாக அவர்களுக்கு ரூ.350 அளிக்க வேண்டியுள்ளது. இது போன்ற நிலையில் தக்காளியின் விலை திடீரென சரிவை சந்தித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே, விலை உயர்வு இருக்கும் போதே தக்காளியை அதிகளவில் விற்பனை செய்ய விவசாயிகள் முன்வந்துள்ளனர். மழையின் காரணமாக இரண்டு மாதங்களுக்கு காய் தரக்கூடிய செடிகள் அனைத்து 40 நாட்களில் அழுகிவிடுகிறது. காட்டுப்பன்றி உள்ளிட்டவையின் அட்டகாசமும் இருக்கிறது. இருப்பினும் தற்போது தக்காளியின் விலை உயர்ந்து உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோவையில் சாகுபடி தீவிரம் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: