தென்னையைத் தாக்கும் ரூகோஸ் கட்டுப்படுத்த சில எளிய வழிகள்

விவசாயத்தில் பயிரில் தொடங்கி, மரங்கள் வரை பூச்சிகளின் தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முறைகள் உள்ளன. அதிலும் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் இருக்கும். இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும். தென்னை மரத்தின் இலை களைத் தாக்கி, அதன் வளர்ச்சியை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருசில வழிமுறைகளைக் கையாளலாம். அதுகுறித்து விளக்குகிறார் திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம்.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ

வட அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் 2016ம் ஆண்டு முதல் தென்னை மரங்களைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வறண்ட காலநிலை நிலவும் சமயங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படும். எனவே தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை முறையாக கண்காணித்து பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலின் அறிகுறிகள்

ரூகோஸ் வெள்ளை ஈக்களால் தாக்கப்பட்ட தென்னை இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் அதன் முட்டைகள் காணப்படும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இவை 20 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி கேப்னோடியம் என்ற கரும்பூசணம் வளர்வதால் ஓலைகள் கறுப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு தென்னை மரத்தின் பாதிப்புக்குள்ளாவதோடு, அதன் வளர்ச்சியும் குன்றிவிடும். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயானது 200க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் வாழை, கொய்யா, சீத்தாப்பழம், மா, பலா போன்றவையும் இதன் தாக்குதலுக்கு உள்ளாகும். ஆனால் இது தென்னையை மிக அதிகளவில் தாக்கும் தன்மை வாய்ந்தது.

ஒருங்கிணைந்த மேலாண்மை

இதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டுப் பொறிகள் (நீளம் 5 அடி × அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டோ அல்லது தண்டுப்பகுதியில் 6 அடி உயரத்தில் (3 × 1.5 அடி) சுற்றியும் வெள்ளை ஈக்களை கவர்ந்தும் அழிக்கலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த தாள்களை துணியால் சுத்தமாக துடைத்த பின்பு ஒட்டும் பசையான விளக்கெண்ணெயை பூச வேண்டும். விசைத் தெளிப்பானைக் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட மரங்களுக்கு 0.5 சதவீதம் வேப்ப எண்ணெய், 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலை குறைக்கலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகளின்மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணிகள் தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார்நகரில் 10 இலைத் துண்டுகள் அடங்கிய ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.

அதேபோல் கிரைசோயிட் அல்லது அப்பர்டோக்கிரைசா அஸ்டர் என்ற இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பூச்சியியல் துறை மற்றும் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இரைவிழுங்கிமுட்டைகள் ரூ.300க்கு ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலின் பின்விளைவாக ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த 1 கிலோ மைதா மாவை 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன்பின் 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வாழை அல்லது சீத்தா மரங்களை ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வளர்ப்பதால் என்கார்சியா ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டினை அதிகரிக்கலாம்’’ என்கிறார் நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம்.
தொகுப்பு: கதிரவன்

The post தென்னையைத் தாக்கும் ரூகோஸ் கட்டுப்படுத்த சில எளிய வழிகள் appeared first on Dinakaran.

Related Stories: