ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மூடப்பட்ட பால் குளிர்விக்கும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி 7வது வார்டில் பழைய பேரூராட்சி பின்புறம் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் கடந்த 2014ம் ஆண்டு ரூ.20 லட்சம் செலவில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விக்கும் மையம் திறக்கப்பட்டது. இந்த பால் குளிர்விக்கும் மையத்திற்கு ஊத்துக்கோட்டை, பனப்பாக்கம், பாதிரிவேடு, புதுப்பாளையம் போன்ற 4 வழித்தடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு நாளைக்கு 3500 லிட்டர் பால் வருகிறது. இதை குளிர்வித்து திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்திற்கு இந்த பால் செல்கிறது.

அங்கு பதப்படுத்தி பாக்கெட் செய்து விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பால் குளிர்விக்கும் மையம் கடந்த மே 11ம் தேதி முதல் திடீரென மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மீண்டும் பால் குளிர்விக்கும் மையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஊத்துக்கோட்டையில் தொகுப்பு பால் குளிர்விக்கும் மையம் கடந்த 2014ம் வருடம் திறக்கப்பட்டது. இந்த மையத்திற்கு ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வருகிறது.

மேலும், தற்போது இந்த பால் குளிர்விக்கும் மையம் கடந்த மே மாதம் திடீரென மூடிவிட்டதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து காக்களூர் பகுதிக்கு 2800 லிட்டர் மட்டுமே பால் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் 600 லிட்டர் பால் குறைவது மட்டுமல்லாமல், திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்குள் பால் கெட்டு போய்விடுகிறது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் அமுல் நிறுவனத்திற்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஊத்துக்கோட்டையில் மூடப்பட்ட பால் குளிர்விக்கும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கூறினர்.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மூடப்பட்ட பால் குளிர்விக்கும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: