ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்க நேரில் அழைப்பு

சென்னை: கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க, இந்திய குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு மக்களுக்கான நலத்திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. தினசரி ஏதாவது ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு வருகிறார். திட்டங்களை அறிவிப்பதுடன் நின்றுவிடாமல் அந்த பணிகள் விரைவுபடுத்த துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களை அவ்வப்போது அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியும் வருகிறார்.

அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாளை (28ம் தேதி) இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக் நேரில் அழைப்பு விடுக்கிறார்.அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று டெல்லி செல்லும் முதல்வர், சில ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (28ம் தேதி) மாலை சென்னை திரும்புகிறார்.

* சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை.
* 1000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.
* டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (28ம் தேதி) மாலை சென்னை திரும்புகிறார்.

The post ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்க நேரில் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: