சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம்?: ரூ.6,000 நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தோருக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. 4 மாவட்டங்களில் வசித்து வெளி மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம். வெள்ளத்தால் பாதித்த வெளி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு நிவாரண விண்ணப்பம் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

விண்ணப்பத்தில் வங்கி எண், இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் குறித்து முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருவாய்த்துறை சார்பில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்காக அரசு ரூ.2,000கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம்?: ரூ.6,000 நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்..!! appeared first on Dinakaran.

Related Stories: