சென்னையில் பருவமழை பாதிப்புகளை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம், ரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத்துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்போதே தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் மின் வாரியப் பணி மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, விரைந்து பணியாற்றிட வேண்டும். அலுவலர்கள் ஆய்வுப்பணிகளுக்கு செல்லும் போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல வேண்டும். எம்.பி., எம்எல்ஏக்கள் நிதியை அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பணிகள் நடைபெறும் இடங்களில் பெருமழையின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), டாக்டர் கலாநிதி வீராசாமி (வட சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்), துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், மயிலை த.வேலு, பரந்தாமன், ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், கா.கணபதி, ஜோசப் சாமுவேல், அசன் மவுலானா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* 1000 தற்காலிக பணியாளர்கள்
1000 தற்காலிகப் பணியாளர்களை 200 வார்டுகளில் பணியமர்த்துவது, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 388 அம்மா உணவகங்கள் மற்றும் 35 மைய சமையற் கூடங்கள் பொது சமையல் கூடங்களாக செயல்படும் வகையில் தயார் நிலையில் வைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

The post சென்னையில் பருவமழை பாதிப்புகளை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: