சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியதால் நடவடிக்கை, ரூ.63,246 கோடி திட்டத்துக்கு தனது பங்கை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்கும்

சென்னை: சென்னையில் ரூ.63,246 கோடி மதீப்பிட்டில் நடைபெறும் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இந்த திட்டத்துக்காக தனது பங்கை ஒன்றிய அரசு விரைவில் விடுவிக்கும். சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.

இவை இரண்டும் சென்னை மெட்ரோ முதல்கட்ட திட்டத்தின் கீழ் வருகின்றன. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான ஊதா வழித்தடமும், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான காவி வழித்தடமும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சிவப்பு வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டது. 2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையை மாநில மற்றும் ஒன்றிய அரசின் சமபங்களிப்பு அடிப்படையில் 2019 ஜனவரி மாதம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் கட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது.

ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜெஐசிஏ நிறுவனம் கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. இந்த வழிமுறையை ஒன்றிய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இத்திட்டம் ஒன்றிய அரசின் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒன்றிய அரசின் திட்டமாக செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், ஒன்றிய அமைச்சரவை இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவே இல்லை. இதனால், ஒன்றிய அரசிடம் இருந்து சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு ஒரு பைசா கூட நிதி கிடைக்கப்பெறவில்லை. திட்டத்துக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி தனது பங்கை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போராடி வந்தது. பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக டெல்லியிலும், சென்னையிலும் பிரதமர் மோடியை சந்தித்த போதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை முறையிட்டார்.

இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தினர். ஆனால், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்ட செலவுகளை தமிழக அரசே கடும் நிதி நெருக்கடிக்கிடையே ஏற்று தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வந்தது. தற்போது வரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடி.

ஆனால் ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடி நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தமிழ்நாடு அரசின் திட்டமாக நடந்து வருவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்.27ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகை விரைவில் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு, திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அமைச்சவை ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: விவசாயம், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.1 லட்சம் கோடி: நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், தன்னிறைவான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ரூ. 1 லட்சம் கோடி செலவில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா மற்றும் கிரிஷோன்னதி யோஜனா ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரண்டு புதிய திட்டங்களுக்கான மொத்த செலவினம் ரூ.1,01,321.61 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக ஊழியர்களுக்கு ரூ.198 கோடி: பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் சுமார் 20,704 பணியாளர்கள், கப்பல்துறை தொழிலாளர் வாரிய ஊழியர்கள்,தொழிலாளர்கள் பயனடையும் வகையில் வெகுமதியாக ரூ.198 கோடி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமையல் எண்ணெய்க்கு ரூ.10,103 கோடி:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவாக மாற்றும் வகையில் 2024 முதல் 2031 வரை ரூ.10,103 கோடி செலவில் சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்களுக்காக தேசிய மிஷன் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை 69 மில்லியன் டன்னாக உயர்த்தப்படும். சமையல் எண்ணெய் உற்பத்தியை 2031ம் ஆண்டில் 20.2 மில்லியன் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்
ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாள் சம்பளம் தீபாவளி போனசாக வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ.2029 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,72,240 ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

* மேலும் 5 செம்மொழிகள்
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 6 மொழிகள் தற்போது செம்மொழிகளாக உள்ளன. இந்த வரிசையில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய 5 மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவை வழங்கி உள்ளது.

* சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று எக்ஸ் தள பதிவில், ‘‘சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்காக சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போக்குவரத்தை எளிதாக்கவும், நெரிசலை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். துடிப்பான நகரத்தில் வாழ்க்கையை எளிதாக்கும்’’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3 வழித்தடங்களும் எவ்வளவு தூரம்?
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளில் 3 வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

1. மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரை ஊதா வழித்தடம் – 45.8 கிமீ தூரம்.

2. கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை காவி வழித்தடம் – 45.8 கிமீ தூரம்.

3. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை சிவப்பு வழித்தடம் – 47 கிமீ தூரம்.

* திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடி

* ஒன்றிய அரசின் பங்கு ரூ.7,425 கோடி

* தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.22,228 கோடி

* கடன் ரூ.33,593 கோடி

* மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவு: கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம்.

The post சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: