சென்னையில் தேவைப்படும் இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் தேவைப்படும் இடங்களில், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்போது குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. ஜூன் மாதத்தில் ஒரு மணிநேரம் மற்றும் 2 மணி நேரத்திற்குள் சோழிங்கநல்லூரில் 12.5 செ.மீ. மழைப்பொழிவும், வடசென்னையில் 9 செ.மீ. மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனே வடிந்து கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு மற்றும் கோவளம் ஆகிய நான்கு வெளியேறும் வழிகளில் செல்கிறது. தாழ்வான சில பகுதிகளில் மழை பெய்யும் நேரத்தில் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. அதுவும் மழை நின்றவுடன் வடிந்து விடுகிறது.

சென்னையில் மழைக்காலங்களில் 24 மணிநேரமும் இரவு பகலாக செயல்படும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் அடைப்பு, குழாய்களில் நீர்த்தேக்கம் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையின் மூலம் அறிவிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளான 40 இடங்களில் தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் காரணமாகவும் மழைநீர்த்தேக்கம் ஏற்படுகிறது. இதற்காக பணிக்குழு அமைக்கப்பட்டு உடனுக்குடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் குறிப்பாக பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும், சேவைத்துறைகளின் சார்பில் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும், கோயம்பேடு, மணப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பணிகள், மழைநீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பகுதிகளில் பல்வேறு சவால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பகுதிகளிலும் குறிப்பிட்ட பணிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் வயிற்றுப்போக்கு தொடர்பாக பிரச்னை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு அதுவும் சரிசெய்யப்பட்டது. இந்த பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிக்கு 362 மருந்து தெளிப்பான்கள், 69 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 202 ஸ்ப்ரேயர்கள், 238 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 2 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 65 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக, நீர்த்தேக்கம் ஏற்படும் இடங்களில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில், பொதுசுகாதாரத்துறை சார்பில் குடிநீர் மற்றும் உணவால் ஏற்படக்கூடிய நோய்கள், கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு தான் தற்போது உள்ளது. மழைக்காலங்களில் அனைத்து அலுவலர்களும் அதிக கவனத்துடன் செயல்பட்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். புகார்கள் வரும் பட்சத்தில் அவற்றில் முழுக் கவனம் செலுத்தி உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சென்னையில் தேவைப்படும் இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: