சென்னை விமானநிலைய கவுன்டர்களில் இணையதள முடக்கத்தால் 20 விமானங்களின் புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்தில் இன்று அதிகாலை முதல் காலை 6 மணிவரை இணையதளம் முடக்கத்தினால், உள்நாடு மற்றும் வெளிநாடு என மொத்தம் 20 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு செல்லும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள், அந்தந்த விமான நிறுவன கவுன்டர்களில் கம்ப்யூட்டர்களில் உள்ள இணையதள சேவை வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை அனைத்து விமான நிறுவன கவுன்டர்களில் இணையதள சேவை திடீரென முடங்கியது. இதனால் பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலமாக போர்டிங் பாஸ்கள் வழங்க முடியவில்லை.

இதையடுத்து அந்தந்த விமான நிறுவன கவுன்டர் ஊழியர்கள், பயணிகளுக்கு போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதி கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு கவுன்டரிலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விமானங்களில் ஏறுவதும் தாமதமாகியது. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் அனைத்து விமானங்களும் இன்று அதிகாலை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

குறிப்பாக, சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 விமானங்களும், உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்களின் புறப்பாடு தாமதமானதால், அதில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். எனினும், சென்னைக்கு வரவேண்டிய அனைத்து விமானங்களும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்ந்தன.

சென்னை விமானநிலையத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவன கவுன்டர்களில், இன்று அதிகாலை முதல் காலை 6 மணிவரை இணையதள பாதிப்பினால் கம்ப்யூட்டர்கள் இயங்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கவுன்டரிலும் கூடுதல் ஊழியர்களை நியமித்து, பயணிகளுக்கு கைகளால் போர்டிங் பாஸ் எழுதி கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணிகள் ஏறுவது காலதாமதமானதால், அந்த விமானங்களின் புறப்பாடு தாமதமானது.

பின்னர் காலை 6 மணிக்குமேல் இணையதள இணைப்புகள் சீரமைக்கப்பட்டன. பின்னர், அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலைய கவுன்டர்களில் இணையதள முடக்கத்தால் 20 விமானங்களின் புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: