ஊதியூரில் 40 நாட்களாக பதுங்கல் நாயை சிறுத்தை தூக்கிச்சென்றது

*வனத்துறை தீவிர கண்காணிப்பு

காங்கயம் : ஊதியூரில் 40 நாட்களாக பதுங்கியிருந்த சிறுத்தை அந்த பகுதியில் நாயை தூக்கிச்சென்றது.திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அடுத்துள்ள தாயம்பாளையம் விவசாயி ஆட்டுப்பட்டியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு புகுந்து ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மலையை சுற்றியுள்ள தோட்டங்களில் புகுந்து மாடு, மாட்டுக் கன்று என தூக்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூரில் முகாமிட்டு சிறுத்தை இரவு நேரத்தில் மலையிலிருந்து இறங்கிச் செல்லும் பாதையை கண்காணித்து அந்தப் பகுதியில் கூண்டுகளை வைத்து ஆடுகளைக் கட்டி வைத்தனர்.

ஆனால் வழக்கமான பாதையில் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு ஊதியூர் மலையின் வடக்கு பகுதி அடிவாரத்தில் உள்ள அகஸ்டின் என்பவரது தோட்டத்திற்கு வந்த சிறுத்தை அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த அவரின் வளர்ப்பு நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்து இழுத்துக் கொண்டு மலைக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து 3 வனத்துறை ரோந்து வாகனங்கள் வரவழைப்பட்டு அதன் மூலம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பகல், இரவு நேரங்களில் சிறுத்தையை தேடி வந்தனர்.

இதையடுத்து சிறுத்தை ஊதியூரை விட்டு மூலனூர் பகுதிக்கு சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இருப்பினும் நேற்று வரை சிறுத்தையை பிடிக்கும் வகையில் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித தடயமும் பதிவாகவில்லை. இந்நிலையில் நேற்று ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை தூக்கிக் சென்றது. இதனால் மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.

இது குறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறியதாவது: கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால்தடம் மற்றும் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு சென்றுவிட்டது என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் நேற்று காலை மீண்டும் சிறுத்தை ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை தூக்கிக் சென்றது.

தகவல் அறிந்த அப்பகுதிக்கு சென்று சிறுத்தையின் கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதன் மூலம் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளோம். கூண்டுகளை தயார்படுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஊதியூரில் 40 நாட்களாக பதுங்கல் நாயை சிறுத்தை தூக்கிச்சென்றது appeared first on Dinakaran.

Related Stories: